https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2547272.jpg

தீவிர ஊரடங்கை அமல்படுத்தினால் இந்தியா பொருளாதாரம் சீரழியும்

புதுடில்லி: 'கொரோனா பரவலை தடுக்க, இந்தியாவில் மீண்டும் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், நாட்டின் பொருளாதாரம் பேரழிவை சந்திக்கும்' என, காங்., - எம்.பி., ராகுலிடம், சுவீடன் பேராசிரியர், ஜோஷன் ஜீசெக் தெரிவித்தார்.நாட்டில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல், ராகுல் பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்களுடன், கொரோனா பரவல் பற்றி, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

புதிய புத்தகம்

ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், நோபல் பரிசு பெற்ற, அபிஜித் பானர்ஜி இருவரிடமும் ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில், ஐரோப்பிய நாடான, சுவீடனை சேர்ந்த, கரோலின்ஸ்கா கல்வி நிறுவனத்தின் பேராசிரியர், ஜோஷன் ஜீசெக், அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ஆசிஷ் ஜா ஆகியோருடன்
நேற்று ஆலோசனை நடத்தினர்.இதன் வீடியோ பதிவை, காங்கிரஸ் வெளியிட்டு உள்ளது.
பேராசிரியர், ஜோஷன் ஜீசெக் கூறியதாவது:இந்தியாவில், கொரோனாவை கட்டுப்படுத்த, தீவிர ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டால், அது பொருளாதாரத்தின் பேரழிவுக்கு வழி வகுத்து விடும். தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கே, இந்தியாவுக்கு சரியான தீர்வாக இருக்கும். தளர்வுகளை படிப்படியாக நீக்க வேண்டும். எனினும், ஊரடங்கிலிருந்து முழுமையாக விடுதலை பெற, சில மாதங்கள் தேவைப்படும். ஊரடங்குக்குப் பின் என்ன செய்ய வேண்டும் என்பதே, பல நாடுகளுக்குத் தெரியவில்லை. கொரோனா தொற்று, சாதாரண நோய் தான். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 99 சதவீதம் பேரிடம், அதற்கான அறிகுறிகள் மிக குறைவாக உள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.பேராசிரியர், ஆசிஷ் ஜா கூறியதாவது:இந்தியா, வைரஸ் பரிசோதனைகளை, பெரிய அளவில் முடுக்கி விட்டால் தான், மக்களுக்கு நம்பிக்கை பிறக்கும். குறிப்பாக அதிக பாதிப்பு இருக்கும் பகுதிகளில், சோதனை மிக அதிகமாக இருக்க வேண்டும்.
கொரோனா பரவலை, தென் கொரியா, தைவான், ஹாங்காங் ஆகிய நாடுகள் சிறப்பாகவும், அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள், மோசமாகவும் எதிர்கொண்டன.
இவ்வாறு, அவர் கூறினார்.

இந்த உரையாடலின் போது, ராகுல் கூறியதாவது:வைரசுக்குப் பின், புதிய உலகத்தை நாம் எதிர்கொள்ள வேண்டிருக்கும். ஐரோப்பாவை மறு வடிவத்துக்குட்படுத்தும்.அமெரிக்கா, சீனா இடையே, அதிகாரச் சம நிலையில் மாற்றம் ஏற்படும். அமெரிக்காவில், 2001ம் ஆண்டு, செப்டம்பர், 11ல் நடந்த தாக்குதல் ஒரு புதிய அத்தியாயம் என்றால், கொரோனா தாக்குதல், புதிய புத்தகமாகும்.

ஒருங்கிணைந்துள்ளது

இந்த நோயை ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு விதமாக எதிர்கொள்கின்றன. தங்களின் இயற்கை வளம், அரசியல் முறை, கலாசாரம் ஆகிய வற்றை வைத்து, சில நாடுகள் சிறப்பாக செயல்படுகின்றன.மக்களுக்கு அதிக அதிகாரங்கள் கொடுத்துள்ள நாடுகள், கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டுள்ளன. எனினும், இந்த வைரஸ், மக்களை ஒருங்கிணைந்துள்ளது. மதம், ஜாதி, மொழி எந்த வேறுபாடுகளாலும், இந்த வைரசை வெற்றி கொள்ள முடியாது; ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, வெற்றி கொள்ள முடியும் என, மக்களை உணர வைத்துள்ளது.
இவ்வாறு, ராகுல் கூறினார்.

குரல் எழுப்பும் பிரசாரம்

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகள், புலம் பெயர்ந்தோர், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணி செய்வோர் ஆகியோரின் பிரச்னைகளை, மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில், இன்று, சமூக வலைதளங்களில், 'குரல் எழுப்பும் பிரசாரத்தை' காங்கிரஸ் மேற்கொள்ள உள்ளது.
இது குறித்து, காங்., செய்தி தொடர்பாளர், அஜய் மாகன் கூறியதாவது:புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும், தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாக செல்ல, அவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தரப்பட வேண்டும் என, காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
மஹாத்மா காந்தி கிராம வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், 200 நாட்களுக்கு வேலை வழங்கப்பட வேண்டும். அவர்களுக்கு உடனடி நிதியுதவியாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நசியாமல் பாதுகாக்க, நிதியுதவி செய்ய வேண்டும் என, காங்கிரஸ் கோரி வருகிறது. இந்த கோரிக்கைகளை மத்திய அரசுக்கு தெரிவிக்கும் வகையில், காங்கிரஸ் சார்பில், சமூக வலைதளங்களில், இன்று குரல் எழுப்பும் பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.காங்கிரஸ் தொண்டர்கள் அனைவரும், 'டுவிட்டர், பேஸ்புக், வாட்ஸ்ஆப்' உட்பட சமூக வலைதளங்கள் அனைத்திலும், மக்களின் பிரச்னைகளை குறிப்பிட்டு தகவல்களை பதிவு செய்வர். இவ்வாறு, அவர் கூறினார்.

'நாட்டை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்'

'கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், நாட்டை பலவீனப்படுத்த, காங்., - எம்.பி., ராகுல் முயற்சிக்கிறார்' என, பா.ஜ., கூறியுள்ளது.மத்திய சட்ட அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:வைரசுக்கு எதிராக, நாடு போராடி வரும் நிலையில், நாட்டை பலவீனப்படுத்தும் முயற்சியில், ராகுல் ஈடுபட்டுள்ளார். தவறான தகவல்களை பரப்பியும், உண்மைகளை திரித்துக் கூறியும், மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்.
ஊரடங்கு தொடர்பாக ராகுல் தெரிவித்த ஆலோசனைகளையும், ஏழைகளுக்கு பணம் தர வேண்டும் என கூறியதையும், காங்கிரஸ் முதல்வர்களே பின்பற்றவில்லை. மொத்தம், 137 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் நாட்டில், கொரோனாவுக்கு, 4,345 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். 15க்கும் அதிகமான நாடுகளில், மொத்தம், 3.43 லட்சத்துக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.இந்த பட்டியலில், நான் சீனாவை சேர்க்கவில்லை. ஏனெனில், சீனா தெரிவித்த தகவல்கள் குறித்து பலரும் சந்தேகம் எழுப்பியுள்ளனர். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், நாட்டை ஓரணியில் திரட்டிய பெருமை, பிரதமர், மோடியையே சேரும். இவ்வாறு, அவர் கூறினார்.

நீதிமன்றத்தில் காங்., மனு

ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்னையில் தலையிட வேணடும் எனக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், காங்., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், ரந்தீப் சுர்ஜேவாலா கூறியதாவது:ஊரடங்கால், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல், புலம்பெயர் தொழிலாளர்கள் தவித்து வருகின்றனர். இவர்களின் பிரச்னையை தீர்க்க, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவில்லை.
அதனால், இந்த விவகாரத்தில் தலையிட்டு, புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்னையை தீர்க்க, மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க கோரி, உச்ச நீதிமன்றத்தில், காங்., சார்பில் மனு தாக்கல் செய்துள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE