பார்லி.,யை கூட்ட மத்திய அரசு தீவிரம்
கொரோனா வைரஸ் பரவல் ஒருபுறம் இருந்தாலும், மழைக்கால கூட்டத் தொடரை நடத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், அதற்கான ஏற்பாடுகள் தீவிரம் பெற்றுள்ளன.
சிக்கல் தீர்ந்தது
சமீபத்திய பட்ஜெட் கூட்டத் தொடர், ஏப்ரல், 3 வரை நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, மார்ச், 23ம் தேதியே, கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்பட்டது.தற்போது, கொரோனா பரவல் காரணமாக, நிலைக்குழு கூட்டங்களைக் கூட, நடத்த முடிய வில்லை. இந்நிலையில், விமானப் போக்குவரத்து துவக்கப்பட்டு விட்டதால், எம்.பி.,க்கள், டில்லிக்கு வருவதில் இருந்த சிக்கல் தீர்ந்தது.
இதனால், நிலைக்குழு கூட்டங்கள், எப்போது வேண்டுமானாலும் துவக்கப்படலாம் என்ற நிலை காணப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் மிகக் குறைவான, எம்.பி.,க்கள், குறைவான நேரமே கலந்து கொள்வர் என்பதால், சமூக இடைவெளியைப் பின்பற்றுவது எளிது.
ஆனால், அனைத்து எம்.பி.,க்களும் கலந்து கொள்ளும் மழைக்காலக் கூட்டத் தொடரை நடத்த முடியுமா என்ற சந்தேகம், எம்.பி.,க்கள் மத்தியில், நிலவி வந்தது.இந்த சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவும், பொதுமக்கள் மத்தியில், நாட்டில் சகஜமான சூழ்நிலை உள்ளதை உறுதிப்படுத்தவும், பார்லிமென்ட்டை கூட்டுவது என்ற முடிவுக்கு, மத்திய அரசு வந்துள்ளது.
ஒரே நேரத்தில், 776 பேர்
அதன்படி, ஜூலை இறுதியில் கூட்ட வேண்டிய மழைக்கால கூட்டத்தொடரை, ஆகஸ்ட் இறுதியில் கூட்ட, மத்திய அரசு திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளை துவக்கி உள்ளன.
லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில், எம்.பி.,க் கள் நெருக்கமாகத் தான் அமர முடியும்.இப்பிரச்னைக்கு தீர்வாக, இரு சபைகளின் கூட்டு கூட்டம் நடக்கும் மைய மண்டபத்தில், போதுமான இடைவெளி விட்டு, எம்.பி.,க்களை அமர வைக்க முடியுமென கருதி, அதற்கான ஏற்பாடுகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.இந்த மண்டபத்தில், ஒரே நேரத்தில், 776 பேர் வரை, அமர முடியும்.முதல்நாள் லோக்சபா, மறுநாள் ராஜ்யசபா என, மாறி மாறி சபைகளை நடத்தலாம் என தீர்மானிக்கப்பட்டு, அதற்கான வசதிகளை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன.
- நமது டில்லி நிருபர் -
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE