https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2547276.jpg

சீனாவுடன் பிரச்னைக்கு தீர்வு காண மூவர் அணி முயற்சி

புதுடில்லி: கடந்த, 2017ல், இந்தியா - சீன ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டபோது, பிரச்னையை தீர்க்க உதவிய மூன்று பேர் அணி, மீண்டும் தற்போது களமிறக்கப்பட்டுள்ளது. அதனால், எல்லை பிரச்னை விரைவில் முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - சீனா எல்லையில், லடாக்கில், இந்திய ராணுவம் சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சீனா தன் படைகளை அனுப்பிஉள்ளது.ஆனால், சீன படைகள், நம் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்துள்ளன. அதையடுத்து, நம் படைகள் எல்லையில் குவிக்கப்பட்டுள்ளன. இரு நாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளதால், எல்லையில் பதற்றம் நிலவுகிறது.இந்நிலையில், இந்தப் பிரச்னைக்கு தீர்வு காண்பது குறித்து, பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் ஆய்வு கூட்டத்தை நடத்தினார்.

https://img.dinamalar.com/data/gallery/gallerye_213441518_2547276.jpg

மீண்டும் களமிறக்கம்

இந்தக் கூட்டத்தில், தேசிய பாதுகாப்பு செயலர் அஜித் தோவல், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.கடந்த, 2017ல், டோக்லாம் பகுதியில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கு, 73 நாட்கள் இரு நாட்டு படைகளும் முகாமிட்டன.
அதன்பிறகு, துாதரக மற்றும் ராணுவம் மூலம் நடத்தப்பட்ட பேச்சில், பிரச்னைக்கு சுமுக தீர்வு காணப்பட்டது.அப்போது, வெளியுறவுத் துறைச் செயலராக, ஜெய்சங்கர் இருந்தார். பிபின் ராவத், ராணுவத் தளபதியாக இருந்தார். இவர்களுடன், அஜித் தோவலும் சேர்ந்து, அப்போது தீர்வு கண்டனர். தற்போது அவர்களை, மோடி மீண்டும் களமிறங்கியுள்ளார்.

https://img.dinamalar.com/data/gallery/gallerye_213445746_2547276.jpg

இது குறித்து, பாதுகாப்புத் துறை நிபுணர்கள் கூறியதாவது:லடாக்கின் தவுலத் பெக் ஓல்டி பகுதியில், நம் ராணுவம் சார்பில், சாலைப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. சீனாவும், தன் எல்லையில், இது போன்ற பணிகளை மேற்கொண்டது. ஏதோ அவர்கள் சுற்றுலாவுக்காக செய்தது போலவும், நாம் மேற்கொள்ளும் பணிகள், ராணுவத்துக்காக செய்வது போலவும் சீனா கூறுகிறது.இது, சீனாவின் ஆதிக்கப் போக்கையே காட்டுகிறது. ஆஸ்திரேலியாவில் இருந்து, ஹாங்காங், தைவானில் உள்ள தெற்கு சீனக் கடல் பகுதி வரை தொடர்ந்த அதன் ஆதிக்கப் போக்கு, தற்போது, அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராக நீண்டுள்ளது. மிகப் பெரிய ராணுவ பலம் உள்ளது என்ற திமிரில், தைரியத்தில், சீன அரசு இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.கடந்த, 1962ல், இதே பகுதியில், இந்தியாவுக்கு எதிராக நடந்த போரை நினைவு கூர்வதாக, சீனா மிரட்டல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

சாலை பணி

ஆனால், இது, 2020; தற்போது, நரேந்திர மோடி பிரதமராக உள்ளார் என்பதை சீனா மறந்து விடக்கூடாது.ஒரு பக்கம் பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை துவக்கும்படி, தன் மூவர் அணியிடம், மோடி கூறியுள்ளார். அந்தப் பேச்சு நடக்கும்போதே, நம் படைகள், எல்லைக்கு வேகமாக விரைந்துள்ளன. எதற்கும் தயாராக இருக்கும்படியும், சீனாவின் மிரட்டலுக்கு பயந்து, படைகளை வாபஸ் பெற வேண்டாம் என்றும், மோடி கூறியுள்ளதாக தெரிகிறது.

இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னை இருந்தபோதும், இதற்கு முன், எந்த அரசும், எல்லைக்கு ராணுவம் செல்வதற்கு தேவையான சாலை உள்ளிட்ட வசதிகளை செய்யவில்லை. ஆனால், மோடி பிரதமரான பிறகு தான், அதற்கான முயற்சிகள் துவங்கின. தற்போது அமைக்கப்படும் சாலைப் பணி, இந்தக் கோடைக் காலத்துக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அது நடந்தால், எல்லையில் இந்தியா வலுவாக அமர்ந்து விடும் என்பதே, சீனாவின் பயம். அந்த பயத்தால் தான், தன் படைகளை அனுப்பி மிரட்டப் பார்க்கிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.இதற்கிடையே, ராணுவத்தின் பல்வேறு படைப் பிரிவு கமாண்டர்களின் இரண்டு நாள் மாநாடு, டில்லியில் நேற்று துவங்கியது.ராணுவ தளபதி, எம்.எம். நரவானே தலைமையில், இந்தக் கூட்டம் நடக்கிறது.

உதவுவதற்கு டிரம்ப் தயார்

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக, நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டபோது, 'மத்தியஸ்தம் செய்யத் தயார்' என, அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியிருந்தார். ஆனால், 'காஷ்மீர் விவகாரம், இரு தரப்பு பிரச்னை; இதில் மற்றவர்கள் தலையீடு தேவையில்லை' என,
மத்திய அரசு தெளிவாகக் கூறியிருந்தது.இந்த நிலையில் தற்போது, சீனாவுடன் பிரச்னை உள்ள நிலையில், மத்தியஸ்தம் செய்யத் தயாராக உள்ளதாக, டிரம்ப் கூறி உள்ளார். இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் அவர் செய்தி வெளியிட்டுள்ளார்.'எல்லைப் பிரச்னையில் தீர்வு காண, மத்தியஸ்தம் செய்யத் தயாராக உள்ளேன். இது தொடர்பாக, இந்தியா, சீனாவுக்கு தெரியப்படுத்தி உள்ளேன். நன்றி' என, அவர் கூறியுள்ளார்.

படைகளுக்கு ஜின்பிங் உத்தரவு

ஒரு பக்கம், இந்திய எல்லையில் பதற்றம் நிலவுகிறது. மற்றொரு பக்கம், சீனா - அமெரிக்கா இடையே மோதல் போக்கு உள்ளது. சீனாவை துாண்டும் வகையில், தென் சீனக் கடல் பகுதியில், அமெரிக்கா தன் போர்க் கப்பலை ரோந்து பணிக்கு அனுப்பியுள்ளது.இந்நிலையில், தன் ராணுவ உயரதிகாரிகள் இடையே, ஜின்பிங் பேசியதாவது:நம் நாட்டின் இறையாண்மையை காக்க வேண்டியது உங்களுடைய கடமை. மிகவும் மோசமான நிலை உருவானால், அதை எதிர்கொள்ள தயாராக வேண்டும். அதற்கேற்ப, நம் படைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.ஆனால், எந்தப் பிரச்னை என்பது குறித்து அவர் தன் பேச்சில் விளக்கவில்லை.இதற்கிடையே, 'எல்லை நிலவரம் கட்டுக்குள் உள்ளது. சுமுக தீர்வு காண்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது' என, சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர், ஜோ லிஜியான் கூறியுள்ளார்.

எல்லையில் சீன போர் விமானங்கள்

இந்தியா - சீனா இடையே பதற்றம் நிலவும் நிலையில், எல்லைக்கு அருகே, திபெத்தின் நகாரி அருகே உள்ள விமான நிலையத்தில், சீன விமானப் படை, தன் போர் விமானங்களை நிறுத்தி வைத்துள்ளது. மேலும், கூடுதலாக ஒரு, விமான ஓடுதளத்தையும் அது அமைத்து வருவது தெரிய வந்துள்ளது.
இது குறித்து, நம் விமானப் படை நிபுணர்கள் கூறியதாவது:நகாரி பகுதியில் உள்ள விமான நிலையம் தொடர்பான செயற்கைக்கோள் படங்களை, தனியார் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு படம், இந்தாண்டு ஏப்., 6ல் எடுக்கப்பட்டது. மற்றொன்று, மே, 21ல் எடுக்கப்பட்டது. அதன்படி பார்க்கையில், அங்கு உள்ள விமான நிலையத்தில், கூடுதலாக, ஒரு ஓடுதளப் பாதையை சீனா அமைத்து வருகிறது. மேலும், அதன் நான்கு போர் விமானங்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த ஓடுதளப் பாதையில், போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களை இயக்க முடியும்.அதே நேரத்தில், இந்த விமான நிலையம், கடல் மட்டத்தில் இருந்து, 14 ஆயிரத்து, 22 அடி உயரத்தில் உள்ளது. அதனால், அதிக அளவு எரிபொருள் மற்றும் அதிக எடையுள்ள பொருட்களை, சீன ராணுவத்தால் எடுத்துச் செல்ல முடியாது.

உதாரணமாக, சீன விமானம், ஒரு மணி நேரம் மட்டுமே இயங்க முடியும். அதே நேரத்தில், நம் விமானப் படை விமானத்தை, நான்கு மணி நேரம் வரை இயக்க முடியும். இது, நமக்கு மிகவும் சாதகமானது. நம் நாட்டை மிரட்டுவதற்காக, இந்த செயலில் சீனா ஈடுபட்டு வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE