புதிய வரவு செலவு திட்டம்:தாக்கல் செய்ய ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை: 'புதிய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
அரசின், 2020 - 2021ம் ஆண்டின் பட்ஜெட் மற்றும் அதன் மதிப்பீடுகள், ஒதுக்கீடுகள் எல்லாம் உருவிழந்து விட்டன. கொரோனா பேரிடர் காரணமாக, முற்றிலும் மாற்றி அமைக்கப்பட வேண்டிய காலகட்டத்தில், நிதி நிலைமை இருக்கிறது.
ஏற்கனவே, 4.56 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையால் தத்தளிக்கும் பட்ஜெட்டில், அரசின் சொந்த வரி வருவாய், 1.33 லட்சம் கோடி கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டது.
மாநிலத்தின் மொத்த வரி வருவாயாக மதிப்பிடப்பட்ட, 2.19 லட்சம் கோடி ரூபாயில், மேற்கண்ட, 1.33 லட்சம் கோடி ரூபாய் சொந்த வரி வருவாய் வாயிலாக கிடைக்குமா என்பது, தற்போதைய நெருக்கடியால், கேள்விக்குறியாக உள்ளது.
ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், சி.ரங்கராஜன் தலைமையில், உயர்மட்ட குழு அமைத்தும், இடைக்கால அறிக்கையை, அரசு கேட்கவில்லை. மூன்று மாதங்களுக்குள் அறிக்கை அளிக்கலாம் என, அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அறிக்கை கிடைக்க பெற்று, அரசு நடவடிக்கை எடுப்பதற்குள், 2020 - -21ம் ஆண்டின் நான்கைந்து மாதங்கள் வீணாகி விடும்.
மாநில நிதி நிலைமைக்கு ஏற்பட்டுள்ள, இந்த நெருக்கடியை கருத்தில் கொண்டு, 2020- 21ம் ஆண்டுக்கான புதிய வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE