https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2547301.jpg

ஜெ.,இல்லத்தை முதல்வர் அலுவலகமாக மாற்ற பரிந்துரை!

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின், போயஸ் தோட்ட இல்லத்தை, நினைவிடமாக மாற்றுவதற்கு பதில், முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்ற, அரசு பரிசீலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நினைவிடமாக மாற்ற வேண்டும் என்பதில், அரசு உறுதியாக இருந்தால், முழுமையாக மாற்றுவதற்கு பதில், ஒரு பகுதியை மட்டும் மாற்றலாம் என்றும், அரசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜெ.,வின் சொத்துக்களுக்கு, அவரது உறவினர்கள் தீபா மற்றும் தீபக் தான் வாரிசுகள் எனவும், உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.ஜெ.,க்கு சொந்தமான, 913 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை நிர்வகிக்க, தங்களை நிர்வாகியாக நியமிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இம்மனுவை, உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அவர்கள் மேல்முறையீடு செய்தனர். மனு, நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.

இவ்வழக்கில், ஜெ.,வின் சகோதரர் மகன் தீபக், மகள் தீபா மட்டுமின்றி, வருமான வரித் துறை, தமிழக அரசு ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. ஜெ.,வின் இரண்டாம் நிலை வாரிசுகளாக உள்ளதால், சொத்துக்களை நிர்வகிக்க தங்களை அனுமதிக்கவும், மூன்றாம் நபர்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்யவும், தீபா, தீபக் தரப்பில் முறையிடப்பட்டது. வருமான வரித் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், 'வருமான வரி மற்றும் செல்வ வரி பாக்கியாக, 16.74 கோடி ரூபாய், ஜெ., செலுத்த வேண்டியுள்ளது.

'கடந்த, 2007 முதல், சென்னை போயஸ் தோட்ட சொத்து, அண்ணா சாலை பார்சன் மேனரில் உள்ள வீடு, செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள சொத்து, ஐதராபாதில் உள்ள வீடு ஆகியவை முடக்கத்தில் உள்ளன' என, கூறப்பட்டுள்ளது. அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி, ''போயஸ் தோட்ட இல்லத்தை, நினைவிடமாக மாற்ற, அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு, தீபா தரப்பில் ஆட்சேபனை எழுப்பப்பட்டுள்ளது. அவர் தரப்பை கேட்க, நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது,'' என்றார்.


நீதிமன்றம் உத்தரவு மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்கள் இருவரும், அ.தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு, எந்த ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. அவர்கள் அந்தக் கட்சி தொண்டர்களே என்றாலும், ஜெ.,வின் சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி, நீதிமன்றத்தை அணுகும் உரிமை வந்து விடாது. எனவே, மனுதாரர்களுக்கு வழக்கு தொடர தகுதி இல்லை; சொத்துக்களை நிர்வகிக்க, நியமனம் கோரவும் உரிமை இல்லை. மேல்முறையீட்டு மனு நிராகரிக்கப்படுகிறது.
ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி, இரண்டாம் நிலை வாரிசுகள், ஏற்கனவே மனு தாக்கல் செய்துள்ளனர். ஜெ.,வின் இரண்டாம் நிலை வாரிசுதாரர்களாக, தீபக், தீபா உள்ளதால், அவர்களுக்கு சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை உள்ளது.
ஜெ., இல்லம், 10 கிரவுண்ட் நிலத்தில் அமைந்துள்ளது. அந்த இல்லத்தை, நினைவிடமாக மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக, அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.

வளர்ச்சி திட்டங்கள்.

..

போயஸ் தோட்ட சொத்தின் மதிப்பு, 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என, தெரிவிக்கப்பட்டது. கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, சட்டப்படி, வாரிசுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, அவர்கள் தரப்பை, அரசு கேட்க வேண்டும். இழப்பீட்டு தொகை நிர்ணயிக்கப்பட்டு, வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அதிகப்படியான இழப்பீட்டு தொகையை அளித்து, இந்த சொத்தை கையகப்படுத்துவதற்கு பதில், உள்கட்டமைப்பு வசதி, நீர் நிலைகளை சுத்தப்படுத்துவது, குடிநீர் வசதி என, வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.
மக்கள் நலனுக்காக, அத்தியாவசிய வசதிகள் ஏராளம் அளிக்க வேண்டிய நிலையில், நினைவிடங்கள் கட்டுவதற்காக, பொது மக்கள் பணத்தை வீணடிக்கக் கூடாது. ஒரு தலைவருக்கு செய்யும் உண்மையான மரியாதை என்பது, சமூக மேம்பாட்டுக்கு, மக்கள் நலனுக்காக பாடுபடுவதன் வாயிலாக, அவரது கொள்கைகளை பின்பற்றுவது தான்.
மறைந்த முதல்வர்களின் இல்லங்களை எல்லாம் நினைவிடமாக்க அரசு விரும்பினால், இதற்கு முடிவு இல்லாமல் போய் விடும். ஒவ்வொரு அரசும், மாநில முதல்வர்களாக இருந்த, தங்கள் தலைவர்களின் வீடுகளை நினைவிடமாக மாற்ற விரும்பினால், பொது மக்களின் பணம் தான் தேவையின்றி பயன்படுத்தப்படும்.

பரிந்துரை என்ன?

போயஸ் தோட்ட இல்லம், முதல்வரின் இல்லம் மற்றும் அலுவலகமாகவே, 15 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டது. முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக பயன்படுத்த, அனைத்து வசதிகளும் அங்கு உள்ளன. எனவே, நினைவிடமாக மாற்றுவதற்கு பதில், முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்ற, அரசு பரிசீலிக்கும்படி, இந்த நீதிமன்றம் பரிந்துரை செய்கிறது. நினைவிடமாக மாற்ற வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருந்தால், சொத்து முழுவதையும் மாற்றுவதற்கு பதில், ஒரு பகுதியை மட்டும் பயன்படுத்தலாம். மீதி பகுதியை, முதல்வர் இல்லம் மற்றும் அலுவலகமாக பயன்படுத்தலாம்.ஜெ.,வின் சொத்துக்களுக்கு, இரண்டாம் நிலை வாரிசுதாரர்களான, தீபா மற்றும் தீபக் ஆகியோருக்கு உரிமை உள்ளதால், அவர்களுக்கு அச்சுறுத்தல் இருக்கும்.
எனவே, அவர்கள் சொந்த செலவில், 24 மணி நேர பாதுகாப்பை, அரசு வழங்க வேண்டும்.
ஏதாவது ஒரு சொத்தை விற்று, 'டிபாசிட்' செய்து, அதில் இருந்து கிடைக்கும் வட்டியை, பாதுகாப்பு செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

சொத்துக்களை நிர்வகிக்க

தீபா, தீபக்கிற்கு உரிமை

'ஜெ.,வின் இரண்டாம் நிலை சட்டப்பூர்வ வாரிசுகள், தீபக் மற்றும் தீபா. ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க, இருவருக்கும் உரிமை உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2016 டிசம்பரில் மறைந்தார். ஜெ.,வின் சகோதரர் ஜெயகுமாரும், 1995ல் மறைந்தார். ஜெயகுமார் - விஜயலட்சுமிக்கு பிறந்தவர்கள், தீபக், தீபா. ஜெ.,வின் சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி, உயர் நீதிமன்றத்தில், தீபக் மற்றும் தீபா மனு தாக்கல் செய்தனர். மனுக்களில், 'ஜெ., திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரது சகோதரரின் வாரிசுகள் நாங்கள். வாரிசுரிமை சட்டப்படி, ஜெ.,வின் சொத்துக்களை நிர்வகிக்க, எங்களுக்கு உரிமை உள்ளது.

'எங்களை தவிர, நெருங்கிய சொந்தம் யாரும் இல்லை. சொத்துக்களின் மதிப்பு, 188 கோடி ரூபாய் வரும்' என, கூறப்பட்டுள்ளது.மனுக்களை விசாரித்த, நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்துாஸ் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு: சந்தியா எழுதி வைத்த உயிலின்படி, போயஸ் தோட்டத்து சொத்தை, மகள் ஜெயலலிதா பெயரிலும், தி.நகரில் உள்ள சொத்தை, மகன் ஜெயகுமார் பெயரிலும் வாங்கி உள்ளார். ஜெயகுமார் - விஜயலட்சுமியின் வாரிசுகள், தீபக் மற்றும் தீபா.ஜெ., திருமணம் செய்து கொள்ளவில்லை. சகோதரரின் குழந்தைகள் என்ற முறையில், வாரிசுரிமை சட்டப்படி, தீபக் மற்றும் தீபா, ஜெ.,வின் இரண்டாம் நிலை சட்டப்பூர்வ வாரிசுகளாக வருகின்றனர். ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க, அவர்களுக்கு உரிமை உள்ளது.

சட்டசபை தேர்தலில் போட்டியிடும் போது, தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்த வேட்பு மனு உடன், சொத்து பட்டியலையும், ஜெ., தாக்கல் செய்தார்.

சொத்துக்களின் மதிப்பு, 188.48 கோடி ரூபாய் என மதிப்பிட்டு, மனுதாரர்களும் மனு தாக்கல் செய்துள்ளனர். தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்த மனுவும், இந்த மனுவும் ஒரே மாதிரியாக உள்ளது.

எனவே, ஜெ., விட்டு சென்ற சொத்துக்கள், சட்டப்பூர்வ வாரிசுகளின் கைகளில் தான் சேர வேண்டும். ஜெ., சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை, இருவருக்கும் தான் உள்ளது.

போயஸ் தோட்டத்தில் பிறந்து வளர்ந்ததாகவும், ஜெ., இருந்த போதும், மறைந்த போதும், போயஸ் தோட்ட இல்லத்துக்குள் செல்ல முடியவில்லை என்றும் தெரிவித்தனர். சில சொத்துக்களை ஒதுக்கி, ஜெ., பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தி, பொது மக்களுக்கு சேவை செய்யப் போவதாகவும் தெரிவித்தனர். அறக்கட்டளை உருவாக்கம் தொடர்பாக, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை, எட்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE