குடிமராமத்து திட்டப்பணி: சிறப்பு கண்காணிப்பு அலுவலர் சந்திரமோகன் ஆய்வு
by DINமயிலாடுதுறையில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் நடைபெற்று வரும் குடிமராமத்து திட்டப் பணிகளைச் சிறப்பு கண்காணிப்பு அலுவலர் பி.சந்திரமோகன் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
மயிலாடுதுறையில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறை மூலம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் சேத்திரபாலபுரம் முதல் மாப்படுகை வரை 6 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்றுவரும் 2020-21-ஆம் ஆண்டுக்கான குடிமராமத்து திட்டப் பணிகளை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை முதன்மைச் செயலாளரும், சிறப்பு கண்காணிப்பு அலுவலருமான பி.சந்திரமோகன் மூவலூர் காவிரி ஆற்றில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது:
ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறப்பதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரூ.51 கோடி மதிப்பீட்டில் 131 குடிமராமத்துப் பணிகள் மற்றும் 80 திட்டப்பணிகளுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இந்தப் பணிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதற்காக மாவட்ட ஆட்சியரும், நானும் இங்கு ஆய்வுக்கு வந்துள்ளோம். மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர் வந்துசேருவதற்கு முன்பாக அனைத்துப் பணிகளும் முடிக்கப்படும் என்றார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர், கூடுதல் ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆசைத்தம்பி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.