http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__4863917827607.jpg

ஜூன் மாத இறுதிக்குள் சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை தாண்டலாம்: முதல்வரிடம் மருத்துவ நிபுணர்கள் குழு எச்சரிக்கை

சென்னை : சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்த போதிலும் பரிசோதனைகள் குறைந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. போர்க்கால அடிப்படையில் தொற்றை தடுக்க தவறினால் ஜூன் மாத இறுதியில் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்து உயிரிழப்புகளும் அதிகரித்து விடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இது குறித்து முதல்வர் பழனிசாமியிடமும் வல்லுநர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று புதிதாக 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு மத்தியில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மருத்துவ நிபுணர்கள் குழுவினர் கலந்து கொண்டனர். அப்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு எந்த தளர்வும் அறிவிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரை செய்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் மருத்துவ நிபுணர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.அதே சமயம், 'பரிசோதனைகளை அதிகப்படுத்தி, வைரஸ் பாதிப்பின் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிப்பது ஒன்றே கொரோனாவை கட்டுப்படுத்த தீர்வாகும். இல்லையெனில் ஜூன் மாத இறுதிக்குள் சென்னையில் மட்டும் 2 லட்சம் பேர் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகிவிடுவர்.1,400க்கும் மேற்பட்டோர் பலியாகக்கூடும்', என்று நிபுணர் குழு எச்சரிக்கப்பட்டுள்ளது.