வரிவிலக்கு விவகாரம்: டி20 உலகக் கோப்பை உரிமையை இந்தியாவிடமிருந்து பறிக்க ஐசிசி திட்டம்?
by DIN2021 டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறவுள்ளது. ஆனால், வரிவிலக்கு விவகாரத்தினால் இந்தியாவிடமிருந்து போட்டியை நடத்தும் உரிமையை ஐசிசி பறிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சர்ச்சைக்கான தொடக்கம், இந்தியாவில் நடைபெற்ற 2016 டி20 உலகக் கோப்பை.
இந்தியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டியில் வரிவிலக்கு எதையும் மத்திய அரசு வழங்கவில்லை. இந்தியச் சட்டத்தின்படி வரித்தொகையைப் பிடித்தம் செய்து கொண்டு பிசிசிஐ, அதிகாரபூர்வ ஒளிபரப்பாளரான ஸ்டார் டிவி உள்ளிட்டவை மீதித்தொகையை ஐசிசிக்கு செலுத்தின. மத்திய, மாநில அரசுகள் வரிச்சலுகை வழங்கும் என ஐசிசி எதிர்பார்த்த நிலையில் எந்தச் சலுகையும் கிடைக்கவில்லை. இதனால் ஐசிசி அதிருப்தி அடைந்தது. இதனால் முழு வரிவிலக்கு பெற்றுத் தர வேண்டும் என பிசிசிஐயிடம் வற்புறுத்தியது ஐசிசி. ஆனால் இதுவரை எந்த வரித் தள்ளுபடியும் கிடைக்கவில்லை.
சிங்கப்பூரில் நடைபெற்ற ஐசிசி கூட்டம் ஒன்றில் இழப்பீடாக ரூ. 160 கோடியை பிசிசிஐ செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. ஆனால் இதுவரை அத்தொகையை பிசிசிஐ திருப்பித் தரவில்லை. வரிச் சலுகைக்கு இந்தியா ஒப்புக் கொண்டதாக ஐசிசி கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விவரங்களை தனக்கு வழங்க வேண்டும் என பிசிசிஐ கோரியது. ஐசிசி விவரங்களை தந்தால் மட்டுமே பணத்தைச் செலுத்த முடியும் எனக்கூறியது.
2019 டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ரூ. 160 கோடியை பிசிசிஐ செலுத்த வேண்டும், இல்லையென்றால் 2021 சாம்பியன்ஸ் கோப்பை, 2023 உலகக் கோப்பை போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்படும். மேலும் அவற்றை வேறிடத்துக்கு மாற்றி விடுவோம் என 2018-ல் ஐசிசி எச்சரித்தது.
2016-க்கு முன்பு நடைபெற்ற அனைத்து போட்டிகளிலும் வரிவிலக்கு தரப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லையென்றால் பிசிசிஐக்கு தரப்படும் பங்கை பிடித்தம் செய்ய வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது. ஐசிசி பெறும் வருவாயில் பெரும் பகுதி இந்தியாவுக்கு பிரித்து தரப்படுகிறது. அதன் பின் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்டவை வருவாய் பெறுகின்றன. இதை எதிர்த்து ஐசிசி கமிட்டியிடம் பிசிசிஐ முறையீடு செய்துள்ளது.
வரிச் சிக்கல் தொடர்பாக 2019 டிசம்பர் 31 வரை முடிவெடுக்க பிசிசிஐக்குக் கெடு கொடுத்த ஐசிசி, பிறகு ஏப்ரல் 17 வரை அதனை நீட்டித்தது. எனினும் கரோனா ஊரடங்கு காரணமாக இந்திய அரசிடம் இதுபற்றி கலந்தாலோசிக்க முடியாத காரணத்தை ஐசிசிக்கு பிசிசிஐ தெரியப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மார்ச் 24 முதல் கரோனா ஊரடங்கு அமலுக்கு வந்தது. தற்போது மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆனால் வரிவிலக்கு தொடர்பாக உறுதியளிக்காவிட்டால் 2021 டி20 உலகக் கோப்பையை இந்தியா நடத்தும் உரிமையைப் பறிக்க ஐசிசி தயங்காது என பிசிசிஐக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா ஊரடங்கு காரணமாக இதுகுறித்த முடிவை அறிவிக்க ஜூன் 30 வரை அவகாசம் அளிக்கவேண்டும் என்று ஐசிசியிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் இதனை ஐசிசி நிராகரித்துள்ளது.
வரி விலக்கு தொடர்பான சர்ச்சையை சரிசெய்ய பிசிசிஐக்கு ஏராளமான வருடங்கள் இருந்தன. போட்டி தொடங்குவதற்கு 18 மாதங்களுக்கு முன்பு வரிவிலக்கு குறித்த உறுதியான தகவல் தெரிவிக்கப்பட வேண்டும். இதனால் பிசிசிஐ கோரியுள்ள ஜூன் 30 தேதி வரையிலான அவகாசத்தை ஐசிசியால் தரமுடியாது. எனவே போட்டி நடத்துவதற்கான உரிமை குறித்த முடிவை எடுக்க ஐசிசிக்கு எல்லா உரிமைகளும் உண்டு என பிசிசிஐக்கு ஐசிசி உயர் அதிகாரி ஜொனாதன் ஹால் தெரிவித்துள்ளார். இதனால் பிசிசிஐயிடமிருந்து 2021 டி20 உலகக் கோப்பைப் போட்டியை நடத்தும் உரிமையை ஐசிசி பறித்துவிடும் என அச்சம் நிலவுகிறது.
எனினும் இதுகுறித்து பிசிசிஐயுடன் ஐசிசி தொடர்ந்து ஆலோசனை செய்து வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி தலைவராக உள்ள மனோகரின் பதவிக் காலம் ஜூலை மாதத்துடன் முடிவடைகிறது. இந்த நிலையில் புதிய தலைவர் மூலம் இப்பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.