மும்பையில் இருந்து உ.பி வந்த சிறப்பு ரயிலில் புலம்பெயர் தொழிலாளர்கள் இருவர் மரணம்
by IANSவாராணசி: மும்பையில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசிக்கு வந்த சிறப்பு ரயிலில் புலம்பெயர் தொழிலாளர்கள் இருவர் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்களை’ ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ‘ஷர்மிக் சிறப்பு ரயிலானது’ புதன் காலை உத்தரப்பிரதேச மாநிலம் வாராணசியில் உள்ள மந்துவாதி ரயில் நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. அதிலிருந்த அனைவரும் இறங்கிச் சென்ற பின்னர் அந்த ரயிலானது அருகிலுள்ள ரயில்வே யார்டுக்கு சுத்தப்படுத்துதல் மற்றும் கிருமிநாசினி தெளிபிற்காக எடுத்துச் செல்லப்பட்டது.
அப்போது அதில் இருவரது உடல்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரயில்வே ஊழியர்கள் உடனடியாக ரயில்வே போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார் அந்த உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் விசாரணையில் இறந்தவர்கள் ஜான்பூர் மாவட்டம் பத்லபூரைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி தசரத் ப்ரஜபதி (20) மற்றும் ஆசம்கர் மாவட்டம் சர்ஹத்பர் பகுதியைச் சேர்ந்த ராம் ரத்தன் கவுட் (63) என்பது தெரிய வந்தது.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.