பக்க விளைவுகள் எதுவுமில்லை;தொடர்ந்து பயன்படுத்தலாம்: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிசோதனையை WHO நிறுத்தியதற்கு ஐசிஎம்ஆர் விளக்கம்...!
டெல்லி: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையால் பக்க விளைவுகள் ஏற்படுவதில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் அனைத்தும் திணறி வருகின்றன. இதனை அடுத்து தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதோடு ஏற்கனவே அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் மூலம் நோயை குணப்படுத்த முடியுமா எனவும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே கடந்த மார்ச் மாதம் மலேரியாவுக்கு பயன்படுத்தப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகள் நோய் பாதிப்பை கட்டுப்படுத்துவதாக கூறப்பட்டது. இதனால் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே, மலேரியா தடுப்பு மருந்துகளால் கொரோனா நோயாளிகள் உயிரிழப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும், இதயம் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் என லான்சட் மருத்துவ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
இந்நிலையில், இது தொடர்பாக ஐசிஎம்ஆர் வெளியிட்ட அறிக்கையில், உலக சுகாதார நிறுவனம் பரிசோதனை செய்யும் மாத்திரையை விட இந்தியா பரிந்துரைக்கும் மாத்திரையின் அளவு குறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதான் இந்த மருந்தின் பரிசோதனையை உலக சுகாதார நிறுவனம் நிறுத்தியுள்ளது. ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. கொரோனா நோய்த்தடுப்பு மருந்தாக தொடர்ந்து பயன்படுத்தலாம் எனவும் விளக்கம் அளித்துள்ளது.
ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா தெரிவிக்கையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரை வைரஸை எதிர்த்து போராடும் திறன் உள்ளதாக ஆய்வில் தெரிகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் இந்த மாத்திரை பயன்படும் என நாங்கள் நம்புகிறோம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதனை பயன்படுத்தும் போது குமட்டல், வாந்தி, சீரற்ற இதயத்துடிப்பு பிரச்னைகள் ஒரு சிலருக்கு ஏற்படும். ஆனால் இதனை தவிர வேறு எந்த பக்கவிளைவுகளும் பெரிய அளவில் ஏற்படவில்லை. உணவு உண்ட பின்பு இந்த மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டும், வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. அதனால் எந்த அச்சமும் இல்லாமல் கொரோனா பாதிப்புக்கு இந்த மருந்தை பயன்படுத்தலாம்’ என கூறியுள்ளார்.