http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__669750392436982.jpg

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது பேச்சில் மட்டுமே; புலம்பெயர் தொழிலாளர்களை தமிழகம் கையாளும் முறை வெட்கக்கேடானது : நீதிபதிகள் வேதனை!!

மதுரை : புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை மோசமாக உள்ளது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வடமாநில தொழிலாளர்களை இவ்வளவு நாட்களாக பணிக்கு பயன்படுத்திவிட்டு இந்த ஊரடங்கு காலத்தில் கண்டுகொள்ளாமல் விடுவது சரியல்ல என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கவில்லை என்றும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்றும் மலைக்கண்ணு என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் வேதனை

இன்றைய விசாரணையின்போது, கேரள மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல மறுப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், சொந்த ஊர்களுக்கு செல்ல மறுக்கும் தொழிலாளர்களை தமிழக அரசு கையாளும் முறை வெட்கக்கேடானது என்று வேதனை தெரிவித்தனர். வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்பது மேடைப் பேச்சில் மட்டுமே உள்ளதாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், புலம் பெயர் தொழிலாளர்களை பதிவு செய்ய என்ன நடைமுறை உள்ளது என்று கேள்வி எழுப்பினர். அத்துடன் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதையும் நீதிபதிகள் வலியுறுத்தினர். மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணிக்காக பயன்படுத்தி விட்டு இப்போது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல என்று கூறி வருத்தப்பட்டனர்.

நீதிபதிகள் உத்தரவு

தமிழகத்தில் பதிவு செய்யப்படாத, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜூன் 10-ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒத்திவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.இதனையடுத்து உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி தொழிலாளர் நலத்துறை கூடுதல் தலைமை செயலர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எடுத்த நடவடிக்கை குறித்து விரைவில் அறிக்கை தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.