5000 ரூபாய் கொடுப்பனவை அரசாங்க ஊழியர்களுக்கு வழங்கியமை தொடர்பில் விசாரணை

by

கொவிட் 19 வைரஸ் பரவல் அசாதாரண சூழ்நிலையால் பாதிக்கப்பட்ட சமுர்த்தி பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவின்போது அரசாங்க சேவையைச் சேர்ந்த உத்தியோகத்தர் மூவரிற்கு ஏப்ரல் மாதம் 5000 ரூபா என்றடிப்படையில் 15000 கொடுப்பனவு வழங்கிய கிண்ணியா பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரிற்கெதிராக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பரிசீலனை விரைவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச் கனிக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய இது தொடர்பில் விசாரணை செய்யுமாறு பிரதேச செயலாளர் அரசாங்க அதிபரிடம் கோரியதற்கிணங்க அரசாங்க அதிபர் இவ்விசாரணையை மேற்கொள்ளுமாறு மாவட்ட உள்ளக கணக்காய்வுப்பிரிவிற்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

இதற்கிணங்க குறித்த விசாரணையின் பிரகாரம் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.