பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் மீது குற்றம் சுமத்தினாலும் ஆணைக்குழு தளராது - மகிந்த தேசப்பிரிய

by

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலுக்கு எதிராக சில தரப்பினர் சுமத்தும் குற்றச்சாட்டுக்களால், ஆணைக்குழு தளராது எனவும் ஆணைக்குழுவின் மூன்று உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து பணியாற்றுவதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவின் கூட்டத்தின் பின்னர் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஆணைக்குழுவில் நாங்கள் தேர்தல் நடத்துவது குறித்து அதிகம் பேசவில்லை. தேர்தல் தொடர்பாக நாங்கள் ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டுமாயின் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் முடிவடைய வேண்டும். அதுவரை தேர்தல் தொடர்பான எந்த பணிகளையும் எங்களால் செய்ய முடியாது.

தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் தயாரித்து வரும் வழிக்காட்டல்களை மருத்துவர்கள், சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைக்கு அமைய தயாரிக்குமாறு நாங்கள் ஆலோசனை வழங்கியுள்ளோம்.

நீதிமன்றம் வழங்கும் உத்தரவுக்கு அமைய நாங்கள் செயற்படுவோம். வேறு எதனையும் எங்களால் செய்ய முடியாது. அடிப்படையான பணிகளை நாங்கள் செய்து வருகின்றோம்.

அதிகாரிகளின் தகவல்களை திரட்டுவது, தபால் வாக்கு சம்பந்தமான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம் எனவும் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.