வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த பயிர்பாதுகாப்பு மருந்தான வேம்பு சார்ந்த பூச்சி கொல்லி மருந்தை பயன்படுத்தலாம் : தமிழக வேளாண்துறை அறிவுறுத்தல்
சென்னை : வெட்டுக்கிளி படையடைப்பு தக்காண பீட பூமியை தாண்டி தமிழகத்திற்கு வர வாய்ப்பு மிக மிக குறைவு என தமிழக வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் வெட்டுக்கிளிகள் தாக்குதல் ஏற்பட்டால் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. வட மாநிலங்களில், நெல், கோதுமை பயிர்களின் அறுவடைகள் நடந்து வரும் நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில், வெட்டுக்கிளிகள் தாக்குதல் துவங்கியுள்ளது.அங்கிருந்து, ஹரியானா, குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கும், வெட்டுக்கிளிகள் படையெடுத்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வெட்டுக்கிளிகளை சமாளிக்க முடியாமல், விவசாயிகளும், அம்மாநில வேளாண் துறையினரும் திணறி வருகின்றனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், நெல் உள்ளிட்ட தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், சிறுதானியங்கள் சாகுபடி களைகட்டி வருகிறது. காய்கறிகள், பழங்கள், வாசனை பொருட்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியும் நடந்து வருகிறது. வெட்டுக்கிளிகள் படை எடுத்தால், பயிர்கள் நாசமாகி விடும் என்பதால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர். ஆனால், வெட்டுக்கிளிகள் படை தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என தமிழக வேளாண் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை அச்சுறுத்தும் வெட்டுக்கிளி படையெடுப்பு குறித்து தமிழக வேளாண்துறை கூறியுள்ளதாவது,' தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் பாதிப்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை. வெட்டுக்கிளிகளின் நகர்வு குறித்து மத்திய அரசு மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த பயிர்பாதுகாப்பு மருந்தான வேம்பு சார்ந்த பூச்சி கொல்லி மருந்தை பயன்படுத்தலாம். மாலத்தியான் மருந்தினை, தெளிப்பான்கள், பெரிய டிராக்டர், தீயணைக்கும் இயந்திரம் மூலம் பறந்த அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம். உயிரியல் கட்டுப்பாடு காரணியான மெட்டாரைசியம் அனிசோபிலே என்ற எதிர் உயிர் பூஞ்சாணத்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம்.வெட்டுக்கிளிகளை சாப்பிடும் கோழி மற்றும் பறவைகள் பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம்.அரசு அனுமதியுடன் பூச்சி மருந்தினை ஒட்டுமொத்த வான்வெளி தெளிப்பு மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம். தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது,' என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.