'ம‌த்​திய அரசு அறி​வி‌த்​தி​ரு‌க்​கு‌ம் ரூ.20 ல‌ட்​ச‌ம் கோடி நிதி‌த் தொகு‌ப்பு போது​மா​ன‌தா, சரி​யா​ன‌தா' எ‌ன்ற‌ கே‌ள்​வி‌க்கு வாச​க‌ர்​க​ளி​ட​மி​ரு‌ந்து வ‌ந்த கரு‌த்​து​க​ளி‌ல் சில...​

by

சரியானதுதான்
மத்திய அரசு தக்க தருணத்தில் அறிவித்திருக்கும் ரூ.20 லட்சம் கோடி நிதித் தொகுப்பு சரியானதுதான். சிந்தையின் நிறைவுதான் செல்வம். கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காரணமாக நிதி நெருக்கடியான நேரத்தில் செய்த உதவி ஆகும். மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டத்தக்கது.

ச.கண்ணபிரான்,  திருநெல்வேலி. 

போதுமானது அல்ல...
மத்திய அரசின் சிறப்பு நிதித் தொகுப்பு (ரூ.20 லட்சம் கோடி) போதுமானது அல்ல. எனினும், ஆறுதல் அளிக்கிறது. குறு } சிறு } நடுத்தரத் தொழில்களை உயர்த்துதல், இதர சில அறிவிப்புகள்  பயனுள்ளவை. அவற்றைச் செயல்படுத்துவதில் உள்ள நடைமுறை இடையூறுகளை நீக்கி, வங்கி மேலாளர்கள் ஒத்துழைப்புடன் உரியவர்களுக்குச் சென்று சேர மத்திய அரசின் அதிகாரிகள் ஆவன செய்தால்தான் பலன் உண்டாகும்.

கு.இராஜாராமன், சீர்காழி.

எப்போது சேரும்?
கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பாதிப்பைத் தொடர்ந்து குறு } சிறு தொழில் நிறுவனங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், விவசாயிகள் என அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ரூ.20 லட்சம் கோடி தொகுப்பு நிதியை மத்திய அரசு அறிவித்துள்ளது போதுமானதுதான். அனைத்து நிவாரணங்களும் வங்கிகளின் மூலமாக எனும்போது எத்தனை பேருக்கு, எப்படி, எப்போது சென்று சேரும் என்பதுதான் தெரியவில்லை.

பி.கே.ஜீவன், கும்பகோணம்.

புருவத்தை உயர்த்துகிறது!
பொது முடக்கத்தில் பாதிப்புக்கு உள்ளானவை குறு } சிறு } நடுத்தரத் தொழில்கள்தான். பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. நிதி நெருக்கடியைச் சமாளிக்க  ரூ.20 லட்சம் கோடி நிதித் தொகுப்பு விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அளித்துவிட்டு, வங்கிகளைக் கைகாட்டியிருப்பதுதான் புருவத்தை உயர்த்துகிறது. ஏனெனில், வங்கி நிர்வாகங்களை குறு } சிறு தொழில்முனைவோர் எளிதில் அணுக முடியாது. நிதி அமைச்சகம் நேரடியாக சில சலுகைகளை அளிப்பது அவசியம்.

சீ.காந்திமதிநாதன், கோவில்பட்டி.

பலன்களை முழுமையாக்க...
பொருளாதாரத்தை மீட்டெடுக்க விவசாயிகள், சிறு உணவு நிறுவனங்கள், மீனவர்கள் போன்றோருக்கு  மத்திய அரசு அறிவித்துள்ள உடனடி நிவாரண மானியங்கள் இப்போதைக்குப் போதுமானவை. எனினும், தொலைநோக்கு அடிப்படையில் இந்த நிதித் தொகுப்பு  போதுமானது அல்ல.  கடும் பொருளாதார நெருக்கடி  உள்ள இந்த நேரத்தில்  அறிவிக்கப்பட்டுள்ள இந்த ரூ.20 லட்சம் கோடி நிதித் தொகுப்பை முழுப்  பயனுடையதாக்கும் வகையில் மத்திய அரசின் செயல் திட்டங்கள்  அமைய வேண்டியது அவசியம்.

வி.ப்ரீத்தி,  ஊரப்பாக்கம்.

தகுதி பார்த்து...
மத்திய அரசின் நிதித் தொகுப்பு ரூ.20 லட்சம் கோடி என்பது மிகவும் பெரிய தொகைதான். உண்மையான தொழில்முனைவோருக்கு நிபந்தனைகள் விதித்துவிட்டு, அதே சமயம் போலி ஆவணங்கள் அளிப்போருக்கு கடனுதவி அளிப்பது தடுக்கப்பட வேண்டும். வாராக் கடன்கள் குறித்த அச்சத்தையும் தவிர்க்க முடியவில்லை. தகுதியான தொழில்முனைவோருக்கும், வணிகர்களுக்கும் சலுகைகளை அளிப்பதில்தான்  உள்ளது வெற்றி.

 சீனி செந்தில்குமார், தேனி.

யானைப் பசிக்கு...
மத்திய அரசு அறிவித்திருக்கும் ரூ.20 லட்சம் கோடி என்பது, 'யானைப் பசிக்குச் சோளப் பொரி' போன்றதுதான். பொது முடக்கம் காரணமாக ஏராளமானோருக்கு வருமானம் இல்லை. பொது முடக்கம் நிறைவடைந்து இயல்பு நிலைக்கு நாடு திரும்பும் வரை, மக்களுக்கு ஒரு வேளையாவது உணவு கிடைக்க வேண்டும். இதனால், பலரிடமும் மாநில அரசுகள் நிதி திரட்டினாலும்,  மத்திய அரசும் தாராளமாக நிதி கொடுத்தால்தான் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்.

உஷா முத்துராமன்,  மதுரை.

ஆவன செய்யப்படுமா?
நிவாரணம் என்ற பெயரில் வழங்கப்படும்  ரூ.20 லட்சம் கோடி என்பது கடன்தான். இதை முதல்  கட்ட  முயற்சியாகக்  கொண்டு, அக்கறையுடன் மக்கள்  பயன்படுத்தி தொழில்வளம்  காண வேண்டும். அதற்கு  முன்பு  பொது முடக்கத்தால் வாழ்வாதாரம்  இழந்த அடித்தட்டு மக்களுக்கு  நிவாரணத்  தொகை வழங்குவது, அவர்களை ஊக்கம்  பெற வைக்கும். சாமானியர்களுக்கும் கடனுதவி கிடைப்பதை அதிகார வர்க்கம் உறுதிப்படுத்த வேண்டும். அப்போதுதான் இந்தச்  சுயசார்பு  நிதித் தொகுப்பு முயற்சி முழுப் பலனைத் தரும்.

அ.யாழினி பர்வதம், சென்னை.

எட்டாக்கனி!
பொது முடக்கத்தின் விளைவாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவது, பொருளாதாரத்தை உடனடியாகச் சீரமைப்பது முதலான நடவடிக்கையாக மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடி நிதித் தொகுப்பு அறிவிப்பு இல்லை. நீண்டகால நோக்கில் அரசின் கருவூலத்துக்குக் குறைந்தபட்ச சேதாரமே ஏற்படும் வகையில், பொருளாதாரத்தை அனுசரித்தல் எனும் வியூகம் எடுக்கப்பட்டுள்ளதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய அரசின் நிதித் தொகுப்பு அறிவிப்பு, சாமானிய மக்களிடமிருந்து விலகி வெகு தொலைவில் உள்ளது. 

ம.அருண்குமார், சிவகாசி.

நம்பிக்கை அளித்துள்ளது
ரூ.20 லட்சம் கோடி நிதித் தொகுப்பு அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்ட மறுநாளே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனும் ரிசர்வ் வங்கியும் வெளியிட்ட நிதித் தொகுப்பு விவரங்கள் சரியானதே. இடையூறு வந்த பின் தளராமல் தகுந்த நிதி ஆலோசனை பெற்று அனைத்துத் தரப்பினருக்கும் ஒதுக்கீடு செய்த செயல், விமர்சனம் செய்ய நினைத்தவர்களை மெüனியாக்கி விட்டது. மக்களுடைய இன்னல்களுக்கு இறுதியான தீர்வு என்று பார்ப்பதைவிட, அனைத்துத் தரப்பினருக்கும் பாதுகாப்பான நம்பிக்கை உணர்வை அறிவிப்புகள் அளித்துள்ளன.

தே.இரா.வீரராகவன், கும்பகோணம்.

ஊழல் இல்லாமல்...
மத்திய அரசு அறிவித்திருக்கும் ரூ.20 லட்சம் கோடி என்பது ஒரு பெரிய தொகைதான். பொதுவாகவே அரசுத் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு என்றாலே செயல்படுத்துவதில் மிகவும் மந்த நிலையும் ஊழலும் இருக்கும். பொது முடக்கம், மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பின்மையால் தொழில் இல்லாமல் பணத் தட்டுப்பாட்டுடன் சிரமப்படுகின்றனர். இதற்கு ரூ.20 லட்சம் கோடி நிதித் தொகுப்பு பயன் தரக் கூடியதுதான். நோய் பரவும் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் ஊழல் இல்லாமல் திட்டங்களை அரசு விரைவாகச் செயல்படுத்தினால் நல்லது.

மா. தங்கமாரியப்பன், கோவில்பட்டி.

மக்களின் எதிர்பார்ப்பு!
கரோனா தீநுண்மி நோய்த்தொற்றால் பாதிப்படைந்த தொழில் துறையைச் சீர்படுத்த ரூ.20 லட்சம் கோடி நிதித் தொகுப்பு விவரங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார். இவையெல்லாம் நீண்டகாலத் திட்டங்கள். குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு போதுமான பலனை அளிக்கும். ஆனால், மக்கள் எதிர்பார்ப்பதோ உடனடி நிவாரணம்; அதாவது, தங்களின் வங்கிக் கணக்கில் பணம்,  ஏற்கெனவே வாங்கிய கடன் தள்ளுபடி முதலானவை. ஆனால், அவை குறித்து மத்திய அரசின் திட்டத்தில் இல்லை.

எஸ். மோகன், கோவில்பட்டி.

சரியாகச் சென்றடைந்தால்...
நாட்டின் பொருளாதாரச் சரிவை சீர் செய்யவும், சுய சார்புக் கொள்கையை வலியுறுத்தியும் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் ரூ.20 லட்சம் கோடி நிதித் தொகுப்பு  இன்றைய மோசமான பொருளாதார நெருக்கடி சூழலில் மிகப் பெரிய தொகையாகவே கருதப்பட வேண்டும். விவசாயம், தொழில் உள்கட்டமைப்பு, மேலாண்மை சார்ந்த நிர்வாகம் முதலானவற்றின் இன்றைய இடர்களைக் களைந்து, இந்தத் துறைகளின் திறன்களை மேம்படுத்தி,   நலிவுற்றோருக்குப் புத்துயிர் அளிப்பதைக்  கருத்தில் கொண்டு நிதித் தொகுப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டங்களின் முழுப் பலன்களும் உரியவர்களைச் சரியாகச் சென்றடைந்தால், இந்த நிதித் தொகுப்பு இன்றைய சூழலில் போதுமானதே ஆகும்.

 கே.ராமநாதன், மதுரை.

நிதி விவரம் தேவை
மத்திய அரசு அறிவித்துள்ள ரூ.20 லட்சம் கோடி போதுமானதா, சரியானதா என்ற கேள்விக்கு முன்பு, எந்தெந்தத் துறைக்கு எவ்வளவு நிதி முதலான விவரங்களை மத்திய அரசு இன்னும் விரிவாக வெளியிடுவது அவசியம். கடன், வட்டி விகிதம், மானியம் எனத் துறை ரீதியான தகவல் இருந்தால் மட்டுமே, ரூ.20 லட்சம் நிதித் தொகுப்பு மக்களுக்கு எந்த வகையில் பலன் அளிக்கும் என்று கூற முடியும்.

 கரு. செந்தில்குமார், கோயம்புத்தூர்.