https://s3.amazonaws.com/adaderanatamil/1590560614-presidential-commission-srilankan-2.jpg

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கு அறிவித்தல் கடிதம் அனுப்புவது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு கவனம்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, பாட்டாலி சம்பிக்க ரணவக்க, அர்ஜூன ரணதுங்க மற்றும் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு அறிவித்தல் கடிதத்தை அனுப்பி வைப்பது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளது.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (26) எவன்கார்ட் நிறுவனத்தின் தலைவர் நிச்சங்க சேனாதிபதி இவர்களால் முறையற்ற விதத்தில் தமது நிறுவனம் கையகப்படுத்தப்பட்டதாக தெரிவித்தார்.

இதற்கு ஏற்ற வகையிலேயே மேற்குறித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக அறிவித்தல் கடிதத்தை அனுப்பி வைப்பது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை இன்றைய தினம் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு 11 கடற்படை உறுப்பினர்களுக்கு அறிவித்தல் கடிதம் அனுப்பி வைக்கப்படடுள்ளது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் தம்மீது பொய்யான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறித்த கடற்படை வீரர்கள் 11 பேரும் ஆணைக்குழுவில் முறையிட்டிருந்தனர்.

எவ்வாறாயினும் குறித்த 11 கடற்படையினரில் பெரும்பாலானோர் கொவிட் 19 தொற்றால் தற்சமயம் பாதிக்கப்பட்டுள்ளதால் இன்றைய தினம் ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாது என அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.