சேலத்தில் 63 நாட்களுக்கு பிறகு இன்று முதல் விமான சேவை தொடங்கியது
by DINசென்னையிலிருந்து 56 பயணிகளுடன் சேலம் வந்த விமானம் மீண்டும் 48 பயணிகளுடன் சென்னை சென்றது.
கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. சேலத்திலிருந்து சென்னைக்கு இயங்கிவந்த விமான சேவையும் மார்ச் 25 ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் 63 நாட்களுக்கு பிறகு இன்று புதன்கிழமை சேலம்-சென்னை இடையிலான விமான சேவை மீண்டும் தொடங்கியது.
மேலும் தற்போது நேரம் மாற்றியமைக்கப்பட்டு சென்னையிலிருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்ட விமானம் சேலத்துக்கு 8.20 மணிக்கு வந்தடைந்தது .
72 பேர் பயனம் செய்யும் வசதி கொண்ட இந்த ட்ரூ ஜெட் விமானத்தில் 56 பேருடன் சேலம் வந்தடைந்தது.
பின்னர் 48 பேருடன் சேலத்தில் இருந்து 8.50 மணிக்கு புறப்படும் விமானம் சென்னைக்குப் 9 .50 மணிக்கு சென்று சேருகிறது.
இதற்கு முன்பாக சென்னையில் இருந்து காலை 9 .50 மணிக்கு புறப்பட்டு 10.50 மணிக்கு சேலம் வந்தடையும். பின்னர் சேலத்தில் இருந்து 11.25 மணிக்கு புறப்பட்டு 12.25 மணிக்கு சென்னை சென்றடையும். தற்போது பயணிகள் வசதிக்காக விமானத்தின் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளதாக ட்ரூ ஜெட் விமான சேவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய இரண்டு நாட்கள் தவிர்த்து வாரத்திற்கு ஐந்து நாட்கள் விமான சேவை இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சேலத்திற்கு வந்த பயணிகளின் உடமைகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மை படுத்தப்பட்டது. மேலும் தெர்மல் ஸ்கேனர் மூலம் அவர்களின் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.