தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களின் இழப்பு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது இந்தியா வம்சாவளி மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கமாக இருந்தாலும் கூட 1970 ஆம் ஆண்டுகளில் ஒட்டுமொத்த இலங்கைவாழ் தமிழர்களுக்காக உருவாக்கப்பட்ட கூட்டணியின் ஊடாக அதனை இலங்கைவாழ் அனைத்து தமிழ் மக்களின் கூட்டுத்தலைமையாக மாற்றியமைத்தவர் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான்.
சௌமியமூர்த்தி தொண்டமானை தொடர்ந்து ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் மலையக தமிழர்களுக்கு பல சேவைகளை ஆற்றிக்கொண்டு இருக்கும் போது ஆறுமுகன் தொண்டமானின் மறைவு ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பாகும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான பிரபா கணேசன் தனது அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஆறுமுகன் தொண்டமான் என்ற ஒரு தலைவனின் சகாப்தம் முடிவடைந்ததாக நான் கருதவில்லை மாறாக தொண்டமான பரம்பறையூடாக மலையக மக்கள் பெற்றுக்கொண்ட உரிமைகள் ஒரு போதும் முற்றுப்பெறாது.
இந்த இயக்கத்தின் தொடர் செயற்பாடுகள் மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு தொடர்ந்தும் அளப்பெரிய சேவையினை ஆற்றும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
அன்னாரின் பிரிவில் சொல்லொன்னா துயரம் கொண்டிருக்கும் மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கும் இலங்கை தொழிளாலர் காங்கிரஸின் பிரமுகர்களுக்கும் முக்கியமாக அன்னாரின் குடும்பத்தினருக்கும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் சார்பாக எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்து கொள்கின்றேன்.