கறுப்பு பணத்தை கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்பலாம் - சிசிர ஜயகொடி

by

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமாயின் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகள் சட்டவிரோதமாக சம்பாதித்த கறுப்பு பணத்தை தேர்தல் நேரத்தில் சந்தையில் புழக்கத்தில் விடுக்கின்றனர். இதன் ஊடாக அந்த பணத்திற்கு சட்ட ரீதியான அங்கீகாரம் கிடைக்கின்றது.

இவ்வாறு கறுப்பு பணம் சட்ட ரீதியான பணத்துடன் சேருவதன் ஊடாக நாட்டில் பொருளாதார செயற்பாடுகளுக்கு அந்த பணத்தை பயன்படுத்த முடியும். இதன் மூலம் பொருளாதாரம் வலுவடையும் எனவும் சிசிர ஜயகொடி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் அமைச்சர் சந்திம வீரக்கொடி, பணத்தை அச்சிட்டாவது வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என பகிரங்கமாக கூறியிருந்தார்.

இந்த நிலையில், நாடு குறித்து தீர்மானங்களை எடுக்கவும் சட்டத்திட்டங்களை உருவாக்கவும் நாட்டு மக்கள் தமது பிரதிநிதிகளாக இப்படியான பொருளாதார நிபுணர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைப்பது நாட்டின் துரதிஷ்டம் என அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.