http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__407650172710419.jpg

ஊரடங்கு மீறி வெளியில் சுற்றியதாக தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 4,672 பேர் கைது: 2,179 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக மாநிலம் முழுவதும்  நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 672 பேரை  போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2,179 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24 ம் தேதி மாலை 6 மணி முதல் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாக பொது மக்கள் பைக் மற்றும் கார்களில் வெளியே சுற்றி வருகின்றனர்.  

 மக்களிடம் பல முறை எச்சரித்தும் சர்வசாதாரணமாக வெளியே சுற்றி வருகின்றனர். அதையடுத்து உரிய அனுமதி இல்லாமல் வாகனங்களில் சுற்றிவரும் நபர்கள் மீது  போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று ஒரே நாளில்  நோய் தொற்று பரப்பும் வகையில் வெளியே சுற்றியதாக தமிழகம் முழுவதும் 4 ஆயிரத்து 225 வழக்குகள் பதிவு செய்து 4 ஆயிரத்து 672 பேரை  போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரையும்  சொந்த ஜாமினில் விடுவித்தனர்.  அவர்களிடம்  இருந்து 2 ஆயிரத்து 179 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 22 லட்சத்து 46 ஆயிரத்து 900 ரூபாய் அபராதமாக போலீசார் வசூலித்தனர்.