கொரோனா மருந்து கண்டுபிடிப்பில் நம்பிக்கை அமெரிக்காவின் புதிய தடுப்பூசி குரங்குகளிடம் சோதனை வெற்றி:
பாஸ்டன்: அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி, குரங்குகளை கொரோனா வைரசிடமிருந்து பாதுகாத்துள்ளது. இதனால், கொரோனா மருந்து கண்டுபிடிப்பதில் புதிய நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசுக்கான மருந்து, தடுப்பூசி கண்டுபிடிக்க உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஒவ்வொரு ஆராய்ச்சிகளும் வெவ்வேறு வகையான தொழில்நுட்பத்தை கொண்டு, தனித்தனி வழிகளில் நடத்தப்பட்டு வருகிறது. இவற்றில் ஏதேனும் ஒரு ஆராய்ச்சி, மனித குலத்தை காக்க வெற்றியடையும் என நம்பப்பட்டு வருகிறது. .இந்நிலையில், அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள பெத் இஸ்ரேல் டியாகோனஸ் மெடிக்கல் சென்டர் தனது ஆராய்ச்சியில் ஆரம்ப கட்ட வெற்றி பெற்றுள்ளது. இதன் தடுப்பு மருந்து ரீசஸ் குரங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டது. தடுப்பூசி போடப்பட்ட குரங்குகளின் உடலில் ஆன்டிபாடிகள் எண்ணிக்கை அதிகரித்து, அவை கொரோனா வைரசை முற்றிலும் அல்லது பெருமளவு அழித்து அதன் உற்பத்தியை தடுத்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசி போடப்பட்ட 35 நாட்களுக்குப் பிறகு குரங்குகளின் மூக்கில் கொரோனா வைரஸ் தெளிக்கப்பட்டும் சோதிக்கப்பட்டது. இதில் தடுப்பு மருந்து வைரசை அழித்துள்ளதாக ஆய்வக வைராலஜிஸ்ட் டேன் பரோச் கூறி உள்ளார். இந்த முடிவுகள் கொரோனா வைரசுக்கு எதிராக மனிதர்கள் வலுவான, நீண்டகால நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துக் கொள்ள முடியும் என்பதை நிரூபிப்பதாக இருக்கிறது என பரோச் கூறி உள்ளார். விரைவில் மனிதர்கள் உடலில் செலுத்தி அடுத்த கட்ட ஆய்வுகள் செய்யப்பட உள்ளன. குரங்குகளிடம் வெற்றிகரமாக சோதனை நடந்துள்ளதால், கொரோனாவுக்கு எதிராக சக்தி வாய்ந்த மருந்தை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை கிடைத்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறி உள்ளனர்.
மனிதர்களிடம் ஆய்வு
அமெரிக்காவின் நோவாவேக்ஸ் பயோடெக்னாலஜி நிறுவனம், தனது கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி ஆய்வு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் NVX-CoV2373 என்ற கொரோனா தடுப்பூசி கடந்த ஏப்ரலில் உருவாக்கப்பட்டது. அந்த தடுப்பூசியை முதல் கட்டமாக விலங்குகளுக்கு செலுத்தி வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் 131 தன்னார்வலர்களுக்கு தடுப்பூசி போட்டு சோதிக்க தொடங்கியுள்ளதாக நோவாவேக்ஸ் தெரிவித்துள்ளது. இந்த பரிசோதனையில், தடுப்பூசியின் திறன் மற்றும் பாதுகாப்பு குறித்து வரும் ஜூலையில் முதல் கட்ட முடிவுகள் கிடைக்கும். மனிதர்கள் மீதான 2ம் கட்ட பரிசோதனை அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் நடத்தப்பட உள்ளதாகவும் நோவாவேக்ஸ் குறிப்பிட்டுள்ளது.