சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு: முதல்வர் பழனிசாமி முன்னிலையில் இன்று 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து...!
சென்னை: சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, கொரோனா தாக்கம் காரணமாக சில நாடுகளில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வெளியேறி வருவதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. உலகப் பொருளாதாரத்தில் கொரோனா நோய்ப் பரவல் ஏற்படுத்தியுள்ள பெரும் தாக்கத்தால் பல வெளிநாட்டு தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்திச் செயல்பாடுகளைப் பரவலாக்கும் பொருட்டு, குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடம்பெயர முடிவு செய்துள்ளனர்.
குறிப்பாக, தமிழ்நாட்டில் அதிக முதலீடு செய்துள்ள நாடுகளான ஜப்பான், தென் கொரியா, தாய்வான், சிங்கப்பூர் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சார்ந்த தொழில் நிறுவனங்கள் தமது தொழிற்சாலைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடமாற்றம் செய்திட முடிவு செய்துள்ளதாகத் தெரிய வருகிறது. இச்சூழலில், இடம் பெயரும் தொழில் நிறுவனங்களை தமிழ்நாட்டில் தொழில் துவங்க ஈர்ப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமைச் செயலாளர் தலைமையில் 'முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்புக்குழு' ஒன்றினை அமைத்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், தமிழக அரசின் முயற்சியால், ஜெர்மனி, பின்லாந்து, ஜப்பான், சீனா, பிரான்ஸ், தைவான் உள்ளிட்ட நாடுகளின் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்யவுள்ளனர். இதற்காக, ரூ.15 ஆயிரம் கோடி முதலீடுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று கையெழுத்தாகின்றன. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறும் இந்த நிகழ்வில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.