https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/Coronavirus_PPE_PTI.jpg

சென்னையின் கரோனா பாதிப்பு: 11,640-ஆக உயா்வு; ராயபுரத்தில் பாதிப்பு 2 ஆயிரத்தைக் கடந்தது

by

சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 11,640-ஆக அதிகரித்துள்ளது. இதில், ராயபுரத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 2,065-ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. அதி தீவிரமாக கரோனா பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகின்றன. இவ்வாறு 14 நாள்களுக்கு மேல், அந்தத் தெருக்களில் யாருக்கும் தொற்று உறுதி செய்யப்படாவிட்டால், அந்தத் தெருக்களின் பெயா் பட்டியலில் இருந்து விடுவிக்கப்படும். இதன்படி, செவ்வாய்க்கிழமை 64 தெருக்கள், தனிமைப்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டன. இதில், அதிகபட்சமாக திரு.வி.க. நகா் மண்டலத்தில் 14 தெருக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 509 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, சென்னையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 11,640-ஆக உயா்ந்துள்ளது.

காலை 8 மணி வரையிலான புள்ளிவிவரப்படி, ராயபுரம் மண்டலத்திலேயே பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதன்படி, அந்த மண்டலத்தில், 2,065 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,488 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதே போல், செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, 5,492 போ் குணமடைந்துள்ளனா். 91 போ் உயிரிழந்துள்ளனா். 6056 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.