https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2546792.jpg

ஊரடங்கு தோல்வி; அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?:மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி

18

''கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய அரசு பிறப்பித்த நான்கு கட்ட ஊரடங்கு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.''அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை, பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும்,'' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல், ஊரடங்கு ஆகியவை தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி., ராகுல், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நேற்று பத்திரிகையாளர்களிடம் பேசினார்; அப்போது அவர் கூறியதாவது:வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக, நான்கு கட்ட ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. இந்த ஊரடங்கு காலத்தில் வைரஸ் பரவலை தடுப்பதற்கு, மத்திய அரசு போதிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

கடும் சிரமம்

இதன் காரணமாகவே, 60 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு நீடிக்கும் நிலையிலும், பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், நம் நாட்டில் மட்டும் தான், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. மத்திய அரசின் நான்கு கட்ட ஊரடங்கு முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது.வைரஸ் பரவுவதை தடுக்க முடிய வில்லை. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை, பிரதமர் மோடியும், மத்திய அரசும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

ஊரடங்கு காலத்தை சரியாக பயன்படுத்தாவிட்டால், விளைவுகள் மிக மோசமாக இருக்கும். புலம்பெயர் தொழிலாளர்களும், ஏழைகளும், தொழில் நிறுவனத்தினரும் கடும் சிரமத்தில் உள்ளனர். இவர்களது கைகளுக்கு பணம் சென்று சேர வேண்டும். அதற்கான திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். இல்லையெனில், பொருளாதாரம் பாதிக்கப்படும்.புலம்பெயர் தொழிலாளர்கள் விஷயத்தில், மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது; அவர்களுக்கு எந்த மாதிரியான வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பதை அரசு அறிவிக்க வேண்டும்.

வித்தியாசம்

மத்திய அரசு நிதி உதவி அளிக்காவிட்டால் மாநில அரசுகள் செயல்பட முடியாது. எனவே, மாநில அரசுகளுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்.மஹாராஷ்டிராவில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சரியாக கையாளாதது தான், வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதற்கு காரணம் என, பலரும் மாநில அரசு மீது குறை கூறுகின்றனர். மஹாராஷ்டிராவில், சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில், நாங்களும் அங்கம் வகிக்கிறோம்; அவ்வளவு தான். ஒரு மாநிலத்தில் ஆட்சி நடத்துவதற்கும், அரசுக்கு ஆதரவு அளித்து, கூட்டணியில் அங்கம் வகிப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. கொரோனாவுக்கு எதிராக போராட, மஹாராஷ்டிரா அரசுக்கு கூடுதல் நிதி தேவை; அதை, மத்திய அரசு வழங்க வேண்டும்.
சீன மற்றும் நேபாள எல்லையில் என்ன நடக்கிறது என்பதை, மத்திய அரசு வெளிப்படையாக கூற வேண்டும். எதையும் மூடி மறைக்கக் கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.

வைரஸ் பரவலை தடுப்பதற்காக

பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு முழு வெற்றி பெற்றுள்ளது. விபரம் தெரியாமல், ராகுல் தவறான கருத்துக்களை தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் இரட்டிப்பு விகிதம், ஊரடங்கிற்கு முன், மூன்று நாட்களாக இருந்தது. தற்போது, இரட்டிப்பு விகிதத்தை எட்டுவதற்கு, 13 நாட்களாகிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் தான், அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளை ஒப்பிடும்போது, நமக்கு பாதிப்பு குறைவாக உள்ளது.பிரகாஷ் ஜாவடேகர், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர், பா.ஜ., - நமது டில்லி நிருபர் -

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE