https://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_2546731.jpg

தொழிலாளர்களுக்கு முழு ஊதியம்: முடிவு எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவு

4

புதுடில்லி: 'ஊரடங்கு காலத்தில், தொழில் நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் கொடுக்க வேண்டும்' என, மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இந்த விவகாரத்தில், மிகவும் விரைவாக முடிவு எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூட வேண்டிய நிலை

மத்திய உள்துறை அமைச்சகம், மார்ச், 29ல் பிறப்பித்த உத்தரவில், 'ஊரடங்கு காலத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படாவிட்டாலும், தொழிலாளர்களுக்கு முழு ஊதியத்தையும் வழங்க வேண்டும்' என, தெரிவித்திருந்தது. இதை எதிர்த்து, தொழில் நிறுவனங்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் கூறப்பட்டதாவது:
ஊரடங்கு காலத்தில் நிறுவனங்கள் செயல்படாத நிலையில், தொழிலாளர்களுக்கு எப்படி முழு ஊதியத்தையும் வழங்க முடியும்... சிறு தொழில் நிறுவனங்களுக்கு அரசு உதவாவிட்டால், அவற்றை மூட வேண்டிய நிலை ஏற்படும்.


புதிய ஆர்டர்கள் எதுவும் வராததால், உற்பத்தி பணிகள் முடங்கியுள்ளன. இதுபோன்ற சூழலில், தொழிலாளர்களுக்கு முழு ஊழியம் தர முடியாது. முழு ஊதியம் தராததற்காக, அரசு எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதற்கு தடை விதிக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள சூழலில், பல்வேறு நாடுகளில், அரசாங்கமே, தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சில திட்டங்கள், சலுகைகளை அறிவித்துள்ளது. ஆனால், நம் நாட்டில், எல்லா இழப்பையும், நிறுவனங்களின் உரிமையாளர்களே ஏற்க வேண்டிய சூழல் உள்ளது. இவ்வாறு, அதில் கூறப்பட்டிருந்தது. சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'முழு ஊதியம் தராத நிறுவனங்கள் மீது எந்த கடுமையான நடவடிக்கையையும் எடுக்கக் கூடாது' என, மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தது.

ஒத்தி வைத்தனர்

இதையடுத்து, முந்தைய உத்தரவை ரத்து செய்து, மே, 17ம் தேதி, புது உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு, நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், கே.கே. வேணுகோபால், ''தொழிலாளர் ஊதியம் தொடர்பாக ஏற்கனவே பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது,''என்றார். இதையடுத்து, 'இது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. இந்த விஷயத்தில் மிகவும் அவசரமாக, உடனடியாக முடிவு எடுத்து, விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை, அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம்
Click here to join
Telegram Channel for FREE