https://img.maalaimalar.com/Articles/2020/May/202005270842424981_Tamil_News_Madras-HC-Today-Judgment-for-Jayalalithaa-assets_SECVPF.gif

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிப்பது யார்?- இன்று தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்

ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.

சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் உள்பட சுமார் ரூ.913 கோடி மதிப்பிலான சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி ஒருவரை நியமிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க.வை சேர்ந்த புகழேந்தி என்பவர் கடந்தாண்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினர்களான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். ஐகோர்ட்டில் அவர்கள் இருவரும் நேரில் ஆஜராகி, ஜெயலலிதாவின் வாரிசுகள் தாங்கள் என்றும் தங்களை சட்டப்பூர்வமான வாரிசுகளாக அறிவிக்க வேண்டும் என்றும் தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது, ஜெயலலிதா ரூ.40 கோடி வருமானவரி பாக்கி வைத்துள்ளதாகவும், அதனால் அவரது போயஸ் கார்டன் இல்லம், நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள சில சொத்துக்களை முடக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

https://img.maalaimalar.com/InlineImage/202005270842424981_1_Jayalalithaa._L_styvpf.jpg

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர். இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று (புதன்கிழமை) நீதிபதிகள் பிறப்பிக்கின்றனர். இதுதொடர்பான அறிவிப்பை ஐகோர்ட்டு பதிவுத்துறை நேற்று வெளியிட்டுள்ளது.

அதேநேரம், போயஸ் கார்டன் வீடு மற்றும் அங்குள்ள அசையா சொத்துக்களை அரசின் பராமரிப்புக்கு மாற்ற தமிழக அரசு அவசர சட்டம் அண்மையில் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும். 

Related Tags :

Jayalalithaa | Jayalalithaa Assets | Madras HC | Deepa | Deepak | ஜெயலலிதா | ஜெயலலிதா சொத்து | சென்னை ஐகோர்ட் | தீபா | தீபக்