டிக்கெட்டுக்காக ஆடுகளை விற்ற தொழிலாளி: விமான நிறுவனம் உதவியால் சொந்த ஊர் பறக்கிறார்
விமானத்தில் சொந்த ஊர் திரும்ப ஆடுகளை விற்பனை செய்து டிக்கெட் வாங்கிய போதிலும், விமானம் ரத்தானதால் திண்டாடிய ஊழியருக்கு நிறுவனம் கைக்கொடுத்துள்ளது.
பொது ஊடரங்கு உத்தரவு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சென்றவர்கள் சொந்த மாநிலம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சில தொழிலாளர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கியுள்ளனர். வேலை இல்லாததால் கையில் பணம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த 12-ந்தேதியில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேற்கு வங்காளத்தை சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் இந்த சிறப்பு ரெயில்கள் மூலம் சொந்த மாநிலம் திரும்ப முயன்றனர். ஆனால் ரெயிலில் டிக்கெட் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில்தான் நேற்று முன்தினத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
மூன்று தொழிலாளர்கள் வீட்டில் வளர்த்த ஆடுகளை விற்று இண்டிகோ விமான நிறுவனம் கொல்கத்தாவுக்கு இயக்கும் விமானத்திற்கு டிக்கெட் புக் செய்தனர். டிக்கெட்டின் விலை சுமார் 30 ஆயிரத்து 600 ரூபாய் எனக் கூறப்படுகிறது.
விமான பயணத்திற்கு அவர்கள் தயாரானபோது இன்றுவரை மேற்கு வங்காளத்திற்கு விமான சேவை கிடையாது என அறிவிக்கப்பட்டது. இதனால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. விமானங்கள் ரத்து செய்யப்பட்டால் பணம் திரும்பி வழங்கப்படாது என்று கூறப்படுகிறது.
இதனால் அந்த தொழிலாளர்கள் மிகுந்த மனவேதனை அடைந்தனர். பிறகு விமான நிறுவன அதிகாரிகளை நாடி உதவி கேட்டனர். அதிகாரிகள் தொழிலாளர்களின் நிலையை புரிந்து கொண்டு நாளை கொல்கத்தா செல்லும் விமானத்திற்கான டிக்கெட்டுக்களை வழங்கினார்.
அதிகாரிகளுக்கு நன்றி கூறி, டிக்கெட்டுக்களை பெற்ற தொழிலாளர்கள் நாளை சொந்த மாநிலம் செல்ல இருக்கிறார்கள்.
Related Tags :
Curfew | Domestic Flight Operation | உள்நாட்டு விமான சேவை | ஊரடங்கு உத்தரவு