https://img.maalaimalar.com/Articles/2020/May/202005270857065130_Tamil_News_BJP-reply-to-Rahul-Gandhi-For-Lockdown-issue_SECVPF.gif

‘ஊரடங்கு வெற்றிதான்’- ராகுல் காந்திக்கு பா.ஜனதா பதிலடி

ஊரடங்கு வெற்றிதான் என்று ராகுல் காந்திக்கு பாரதிய ஜனதா பதிலடி கொடுத்து உள்ளது.

புதுடெல்லி:

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் மத்திய அரசு 4 கட்டங்களாக அமல்படுத்திய ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியதற்கு, ‘ஊரடங்கு வெற்றிதான்’ என்று பாரதிய ஜனதா பதிலடி கொடுத்து உள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய மந்திரியுமான பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-

கொரோனாவுக்கு எதிராக ஒட்டுமொத்த தேசமும் போராடிக் கொண்டிருக்கும் போது, காங்கிரஸ் கட்சி இந்த பிரச்சனையில் அரசியல் செய்து கொண்டு இருக்கிறது. காங்கிரஸ் எந்த மாதிரியான அரசியல் நடத்துகிறது என்பதற்கு ராகுல் காந்தியின் பேட்டியே உதாரணம். அவர் சொன்னதெல்லாம் தவறு. ஊரடங்கு வெற்றிதான். ஊரடங்கை அமல்படுத்துவற்கு முன்பு நாட்டில் 3 நாட்களில் கொரோனா தொற்று இரு மடங்கு ஆனது. ஊரடங்கை அமல்படுத்திய பிறகு தற்போது 13 நாட்களில் இரு மடங்கு ஆகிறது. இதுதான் இந்தியாவின் வெற்றி. உரிய நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற நாடுகளை விட இந்தியாவில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை உலக நாடுகள் பாராட்டுகின்றன. ஆனால் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கிறது. ஊரடங்கை அமல்படுத்தியது ஏன்? என்று முன்பு கேள்வி எழுப்பிய காங்கிரஸ் இப்போது, ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தும் போதும் கேள்வி எழுப்புகிறது. இதன்மூலம் காங்கிரசின் இரட்டை வேடமும், நயவஞ்சகத்தனமும் அம்பலமாகிறது.

3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு ரெயில்கள் மூலம் 45 லட்சத்துக்கும் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவர்களுடைய சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார்கள். இது ஒரு வரலாற்று சாதனை ஆகும்.

ஏழைகளின் கையில் மத்திய அரசு பணத்தை கொடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறுகிறார். உத்தரபிரதேசம், கர்நாடகம் போன்ற பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்கள் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பணம் வழங்கி இருக்கின்றன. இதேபோல் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களையும் ராகுல் காந்தி பணம் வழங்க சொல்லட்டும். 80 கோடி மக்களுக்கு 5 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருள், 9 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் தலா ரூ.2 ஆயிரம், 20 கோடி பெண்களின் வங்கி கணக்கில் தலா ரூ.500, மேலும் 8 கோடி குடும்பங்களுக்கு இலவச சமையல் கியாஸ் சிலிண்டர் வழங்குவது போன்ற மக்கள் நல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஏழைகளுக்கு 7,500 ரூபாய் கொடுக்க வேண்டும் என்று ராகுல் காந்தி சொல்கிறார். அதைவிட இந்த திட்டங்கள்தான் உண்மையான உதவியாக அமைந்து உள்ளன.

எதிர்மறை அரசியலை மக்கள் விரும்புவது இல்லை. நாட்டு மக்கள் ஒரே மனநிலையில் இருக்கும் போது, காங்கிரஸ் வேறு மாதிரி பேசுகிறது. இதனால் அந்த கட்சி மக்களுடன் தொடர்பை இழந்து வருகிறது.

இவ்வாறு பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

Related Tags :

Curfew | Congress | Rahul Gandhi | BJP | ஊரடங்கு உத்தரவு | காங்கிரஸ் | ராகுல் காந்தி | பாஜக