ஆப்கானிஸ்தானில் 900 தலிபான் கைதிகள் விடுவிப்பு
ஆப்கானிஸ்தான் நாட்டில் 900 தலிபான் கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும், அந்த நாட்டு அரசுக்கும் இடையே 19 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசு தீவிர முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி தலீபான் பயங்கரவாதிகளுடன் ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்த அந்த அமைப்புடன் அரசு நேரடி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தப் பேச்சுவார்த்தையின் ஓர் அங்கமாக ஆப்கானிஸ்தான் சிறைகளில் உள்ள 5 ஆயிரம் கைதிகளை விடுவிப்பதற்கான ஆணையில் அதிபர் அஷ்ரப் கனி கடந்த மாதம் கையெழுத்திட்டார்.
அந்த அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒவ்வொரு தொகுப்பாக தலிபான் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை தலிபான் பயங்கரவாதிகள் 3 நாள் சண்டை நிறுத்தத்தை அறிவித்தனர். அதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பக்ராம் சிறையில் இருந்து 100 தலிபான் கைதிகளை அரசு விடுதலை செய்தது. இதனிடையே சண்டை நிறுத்தத்தை மேலும் 4 நாட்களுக்கு நீட்டித்து தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவித்தது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் நாட்டில் இதுவரை இல்லாத அளவில் நேற்று ஒரே நாளில் 900 தலிபான் கைதிகள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, ராணுவ செய்தி தொடர்பாளர் ஜாவித் பைசல் கூறுகையில், தலிபான்களின் சண்டை நிறுத்தத்துக்கு மதிப்பளிக்கும் வகையிலும், சமாதான முயற்சிகளை முன்னெடுக்கும் விதமாகவும் 900 தலிபான் கைதிகள் விடுவிக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்தார்.