தமிழ்நாட்டிற்கு வெட்டுக்கிளிகள் படையெடுக்க வாய்ப்பில்லை- வேளாண்துறை
வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து தமிழக வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது.
சென்னை:
உலகிலேயே பேரழிவை ஏற்படுத்தும் இடம்பெயர் பூச்சியாக ‘பாலைவன வெட்டுக்கிளி’ என்ற வகையான வெட்டுக்கிளி கருதப்படுகிறது. இவை பயிர்களை அழித்து உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தக்கூடியவை. அதன்மூலம் வாழ்வாதாரத்துக்கு பாதிப்பு உண்டாகும்.
தற்போது, இந்த வெட்டுக்கிளிகள் கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்காவில் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, எரித்ரியா, உகாண்டா, சூடான், தான்சானியா, ஏமன் உள்ளிட்ட 10 நாடுகளில் மையம் கொண்டுள்ளன. அங்கு பெரும் நாசத்தை உண்டாக்கி வருகின்றன. அதே சமயத்தில், அடுத்த மாதம் இந்தியாவுக்கு படையெடுக்கும் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் வெட்டுக்கிளி கணிப்பு மைய மூத்த அதிகாரி கெய்த் கிரஸ்மன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பு குறித்து தமிழக வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக வேளாண்துறை தெரிவித்துள்ளதாவது:-
இந்தியாவை பொறுத்த வரையில் ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் தற்போது காணப்படும் வெட்டுக்கிளி படையெடுப்பு தக்காண பீடபூமியைத் தாண்டி இதுவரை வந்ததில்லை. எனவே தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.
வெட்டுக்கிளி நகர்வு குறித்து மத்திய அரசு மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.
இவ்வாறு வேளாண்துறை விளக்கமளித்துள்ளது.
Related Tags :
fight locusts | TN Agriculture Department | வெட்டுக்கிளி | தமிழக வேளாண்துறை