நாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு என தகவல்
11 நகரங்களில் 70 சதவீதம் கொரோனா பாதிப்பு உள்ளதால் அதன் மீது அதிக கவனம் செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க முதன் முதலில் மார்ச் மாதம் 22-ந்தேதி ஒருநாள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்கள் ஊரடங்கை சிறப்பாக கடைபித்ததைத் தொடர்ந்து, அதே மாதத்தில் 25-ந்தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 14-ந்தேதி வரையிலான 21 நாட்கள் நாடு தழுவிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதிலும் கொரோனா கட்டுக்குள் வராததால் மேற்கொண்டு 19 நாட்கள், அதாவது மே 3-ந்தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இதையடுத்து மே 17-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்ட 3-ம் கட்ட ஊரடங்காலும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் அடுத்து பிறப்பிக்கப்பட்ட 31-ந்தேதி வரையிலான 4-ம் கட்ட ஊரடங்கு முடிய இன்னும் 4 நாட்களே உள்ளன. ஆனாலும் கொரோனா ஆட்டம் நின்றபாடில்லை.
இந்த நிலையில் கொரோனா பாதிப்பு தற்போதும் வேகமாக பரவி வருவதால் 5-வது கட்டமாக ஊரடங்கு நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி, மும்பை, பெங்களூரு, புனே, தானே, இந்தூர், சென்னை, அகமதாபாத், சூரத், ஜெய்ப்பூர், கொல்கத்தா ஆகிய 11 நகரங்கள் வைரஸ் தொற்று நோய்களின் ஹாட்ஸ்பாட்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த நகரங்களில் கடுமையான நெறிமுறைகள் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், அதே நேரத்தில் நாட்டின் பிற பகுதிகளும் மேலும் சில தளர்வுகளை எதிர்பார்க்கலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக, திருமண சடங்குகள் மற்றும் பண்டிகைகளுக்கான கூட்டங்களை தீர்மானிக்கும் முடிவு மாநில அரசுகளே எடுக்க வாய்ப்புள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா, ஆமதாபாத், புனே, தானே, ஜெய்ப்பூர், இந்தூர் மற்றும் சூரத் ஆகிய 11 முக்கிய நகரங்களில் கவனம் செலுத்தப்படும் என்றும். மற்ற நகரங்களில் ஊரடங்கு தளர்வுகளுடன் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என தெரிகிறது.
இதுகுறித்து வரும் 31-ம்தேதி (ஞாயிறு) 'மான் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அறிவிப்பார் என கூறப்படுகிறது.