https://img.maalaimalar.com/Articles/2020/May/202005271416083615_Tamil_News_Southern-Railway-ready-to-run-express-trains-all-time_SECVPF.gif

‘எக்ஸ்பிரஸ்’ ரெயில்களை இயக்க எந்நேரமும் தயார்- தெற்கு ரெயில்வே

தெற்கு ரெயில்வே ரெயில்கள் இயக்குவது தொடர்பாக எந்த நேரத்தில் அறிவிப்பு வந்தாலும், அதற்கேற்றவாறு ரெயில் சேவை தொடங்க, அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

சென்னை:

கொரோனா ஊரடங்கு உத்தரவால் ரெயில் போக்குவரத்து நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டிருந்தது. பயணிகள் ரெயில் சேவை ஜூன் மாதம் வரை தொடங்காது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

முன்பதிவு செய்த பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவும் ரெயில்வே வாரியம் உத்தரவிட்டது. இதற்கிடையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஊழியர்கள் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்ல வசதியாக சிறப்பு ரெயில் இயக்கப்படுகின்றன.

15 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பல்வேறு நகரங்களுக்கு இடையே விடப்பட்டுள்ளது. இது தவிர ஜூன் 1-ந் தேதி முதல் 200 எக்ஸ்பிரஸ் ரெயில்களையும் இயக்க ரெயில்வே தயாராக உள்ளது.

ஊரடங்கு உத்தரவு வருகிற 31-ந் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பின்னர் படிப்படியாக ரெயில் சேவைகளை தொடங்க ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தெற்கு ரெயில்வே ரெயில்களை இயக்க ஆயத்தப்பணிகளை தயார்படுத்தியுள்ளது. ரெயில்கள் இயக்குவது தொடர்பாக எந்த நேரத்தில் அறிவிப்பு வந்தாலும், அதற்கேற்றவாறு ரெயில் சேவை தொடங்க, அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.

இதற்காக ரெயில் பெட்டிகளை தயார் நிலையில் வைக்கும் வகையில் அதன் பாதுகாப்புகளை ஆய்வாளர்கள் உறுதி செய்கிறார்கள். கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் சமூக இடைவெளியை பின்பற்றி, ரெயில் சேவையை தொடங்குவதற்கு ஏற்ப அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்துள்ளது.

மின்சார ரெயில்களை இயக்குவது கடினமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தினமும் 10 லட்சம் பயணிகள் மின்சார ரெயிலில் பயணம் செய்வதால், கூட்டத்தைக் கட்டுப்படுத்துவது சவாலாக இருக்கும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

அதனால் 3 வழித்தடங்களிலும் மின்சார ரெயில்களை இயக்குவது பெரும் சிரமம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

தற்போது சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதால், பல்வேறு மாநிலங்களுக்கு பெட்டிகள் சென்றுள்ளன. ஆனாலும் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்குவதற்கு தேவையான பெட்டிகளை சேகரித்து வருகிறோம்.

https://img.maalaimalar.com/InlineImage/202005271416083615_1_accoach._L_styvpf.jpg

ஏ.சி. பெட்டிகள் மற்றும் சாதாரண பெட்டிகளின் பாதுகாப்புகள் ஆய்வு செய்யப்படுகிறது. சென்னையில் இருந்து பயணிகள் ரெயில் சேவையை தொடங்க வாய்ப்பு குறைவாகவே உள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால், ரெயில் சேவையை சென்னையில் தொடங்குவது குறித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படுத்தப்படும்.

ரெயில் சேவை இயக்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில் குறைந்த அளவில் சேவை தொடங்க தயாராக இருக்கிறோம். சமூக இடைவெளியுடன் பெட்டிகளில் பயணிகள் பயணிக்க தேவையான வழிமுறைகளை பின்பற்ற உள்ளோம்.

மின்சார ரெயில்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது சவாலாக இருக்கும். இதற்காக ரெயில்வே துறை பல்வேறு வழி நெறிமுறைகளை வகுத்துள்ளது. நீண்ட தூரம் செல்லக்கூடிய ரெயில்களை குறைந்த அளவு இயக்க தயாராக இருக்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

Related Tags :

Coronavirus | Curfew | Southern Railway | ஊரடங்கு உத்தரவு | கொரோனா வைரஸ் | தெற்கு ரெயில்வே | எக்ஸ்பிரஸ் ரெயில்