https://img.maalaimalar.com/Articles/2020/May/202005271307250075_Tamil_News_How-pregnant-women-escape-from-Coronavirus_SECVPF.gif

கொரோனாவிடம் இருந்து கர்ப்பிணிகள் தப்பிப்பது எப்படி?

கொரோனாவிடம் இருந்து கர்ப்பிணிகள் தப்பிப்பது எப்படி என்பது குறித்து எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் விஜயா விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை:

கொரோனாவின் கோர பிடிக்கு சிறுவர்கள், முதியவர்கள், ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

நுரையீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்நோய் எளிதில் தொற்றி விடுகிறது. தற்போது கர்ப்பிணி பெண்களையும் கொரோனா அதிகளவு பாதித்து வருகிறது.

பிரசவத்திற்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களை பரிசோதனை செய்யும்போது பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வருகிறது.

இதனால், பிரசவ நேரத்தில் தாய்க்கு பாதிப்பு ஏற்படுமா? பிரசவத்துக்கு பின்னர் குழந்தைக்கு இந்நோய் பரவுமா? கர்ப்பிணிகளை இந்நோய் அதிகளவு தாக்குகிறதா? என்பது குறித்து, எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனை இயக்குனர் டாக்டர் விஜயாவிடம் கேட்டபோது அவர் அளித்த விளக்கம் வருமாறு:-

கொரோனா வைரஸ் தொற்று கர்ப்பிணி பெண்களை மட்டும் குறி வைத்து தாக்குவதில்லை. எல்லோரையும் பாதிப்பது போலத்தான் கர்ப்பிணி தாய்மார்களையும் தாக்குகிறது. சாதாரண மக்களுக்கு எப்படி கொரோனா பரவுகிறதோ அதுபோலத்தான் கர்ப்பிணிகளுக்கும் பாதிப்பை உண்டாக்குகிறது. பிரசவத்துக்காக மருத்துவமனையில் அனுமதித்த பெண்களுக்கு பரிசோதனை செய்தபோது ஒரு சிலருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதைத் தொடர்ந்து கர்ப்பம் தரித்துள்ள பெண்கள், பிரசவத்திற்கு தயாராக உள்ள பெண்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவர்கள் தனியார் மருத்துவமனையில் தொடர் பரிசோதனை செய்தாலும் கூட அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்று சுகாதாரத்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://img.maalaimalar.com/InlineImage/202005271307250075_1_coronavirus5._L_styvpf.jpg

அதன்படி தற்போது கர்ப்பிணிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை பரிசோதனை செய்து முடிவு தெரிந்தபின்னரே, மகப்பேறு மருத்துவமனையில் பிரசவத்துக்கு வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒருவேளை கொரோனா பரிசோதனை செய்யாத கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு மருத்துவமனையில் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்களுக்கு பொதுவாக வழங்கப்பட்டுள்ள அதே விழிப்புணர்வு தான் கர்ப்பிணிகளுக்கும் பொருந்தும்.

சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். இந்த 3 வழிமுறைகளையும் கடைப்பிடித்தால் கொரோனாவிலிருந்து தப்பலாம்.

கூட்டம் மிகுந்த இடங்களில் கர்ப்பிணிகள் ஒதுங்கியிருக்க வேண்டும். இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறி இருந்தால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டும். கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்களிடம் இருந்து குழந்தைக்கு பரவாது.

இது ரத்த வழியாக பாதிப்பை ஏற்படுத்தாது. அதனால் குழந்தைக்கு தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை. தாயிடம் இருந்து இருமல், சளி துளி மூலம் பரவ வாய்ப்புள்ளது. ஆனாலும், கையுறை, முகக்கவசம் மூலம் இதனை தடுக்கலாம். தாய்ப்பால் கொடுக்கும்போது கைகளை கிருமிநாசினி மூலம் சுத்தம் செய்து குழந்தையை கையில் எடுக்க வேண்டும்.

கர்ப்பிணிகள் கருவுற்ற காலத்தில் கவனமாக இருக்க வேண்டும். வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Coronavirus | கொரோனா வைரஸ் | எழும்பூர் மகப்பேறு மருத்துவமனை