பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரம்: தமிழகம் முழுவதும் மாற்றத்துக்கு தயாராகும் காவல்துறை
* உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி ஓய்வு
* ஒரு டிஜிபி, 2 ஏடிஜிபிக்களும் பணி நிறைவு
சென்னை: தமிழக உளவுத்துறை ஐஜி சத்தியமூர்த்தி, 3 நாளில் ஓய்வு பெறுகிறார். அதோடு ஒரு டிஜிபி, 2 ஏடிஜிபிக்கள் ஓய்வு பெறுகின்றனர். இதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகளை மாற்ற தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியின்போது, உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டவர் சத்தியமூர்த்தி. தேர்தல் நேரத்தில் இவரை மாற்ற வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்தன. தொடர்ந்து, அவர் மாற்றப்பட்டார். மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் சத்தியமூர்த்தி மீண்டும் உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்பட்டார். ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருந்த சத்தியமூர்த்தி, எடப்பாடி பழனிசாமி முதல்வரானவுடன் அவருடன் நெருக்கமானார்.
தற்போது அவரது பதவிக்காலம் வரும் 31ம் தேதியுடன் முடிகிறது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சனிக்கிழமை மாலை வரை அவர் பணியாற்றுவார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி முடிவு செய்தார். இதற்காக அவரிடம் கேட்கப்பட்டபோது, அவர் தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.அதிமுக ஆட்சி முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற வேண்டும். 11 மாதங்கள்தான் தேர்தலுக்கு உள்ளது. இந்த நேரத்தில் மீண்டும் பணி நீட்டிப்பு வாங்கினால், ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் சிக்கலை சந்திக்க வேண்டியது வரும். தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் ஏற்கனவே அவர் ஒரு சார்புடன் செயல்படுவார் என்ற குற்றச்சாட்டு உள்ளதால், எப்படியும் தேர்தல் ஆணையமே அவரை மாற்றிவிடும்.
இதனால் பணி நீட்டிப்பு காலங்கள் கூட முழுமையாக பணியாற்ற முடியாது. இதனால்தான் அவர் பணி நீட்டிப்பு வேண்டாம் என்று கூறிவிட்டதாக கூறப்படுகிறது.
உளவுத்துறையில் ஐஜி பதவியை தவிர ஏடிஜிபி அல்லது டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரிகளையும் நியமிக்கலாம். இதற்காக சத்தியமூர்த்தி இருக்கும்வரை அந்தப் பதவியை நிரப்பாமல் பார்த்துக் கொண்டார். தற்போது அவர் பணி ஓய்வு பெறுவதால், ஐஜி மற்றும் ஏடிஜிபி பதவிகளை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. பலர் போட்டியிட்டாலும், தற்போதைய ஐஜி சத்தியமூர்த்தி மற்றும் டிஜிபி திரிபாதி ஆகியோர் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனராக உள்ள ஈஸ்வரமூர்த்தியை நியமிக்க அரசுக்கு பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவரே உளவுத்துறை ஐஜியாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, சமூக நீதித்துறை டிஜிபி லட்சுமி பிரசாத், காவலர் நலன் ஏடிஜிபி சேஷசாயி, தொழில்நுட்ப பிரிவு ஏடிஜிபி மாகாளி ஆகியோரும் இந்த மாதத்துடன் பணி ஓய்வு பெறுகின்றனர். இதற்கிடையில் தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகளை மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக மண்டல ஐஜிக்கள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் பலர் மாற்றப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
அதில் தற்போது சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக இருக்கும் ஜெயந்த் முரளி, முக்கிய பதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதனால் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி பதவிக்கு சந்தீப் ராய் ரத்தோர் வரலாம் என்று கூறப்படுகிறது. சென்னையிலும் கூடுதல், இணை, துணை கமிஷனர்கள் அளவில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழகம் முழுவதும், காவல்துறையில் பெரிய அளவில் ஓரிரு நாளில் மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால், அதிகாரிகள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பும், பரபரப்பும் நிலவுகிறது.
4 பேருக்கு டிஜிபி பதவி
தமிழகத்தில் தற்போது ஏடிஜிபிக்களாக உள்ள கந்தசாமி, மகாளி, ஷகீல்அக்தர், ராஜேஷ்தாஸ் ஆகிய 4 பேருக்கு டிஜிபி பதவி உயர்வு அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தது. அதை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. இதைத் தொடர்ந்து ஓரிரு நாளில் அவர்கள் 4 பேருக்கும் டிஜிபி பதவி உயர்வு வழங்குவதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பிக்கும்.