http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__729625880718232.jpg

இந்திய அணியுடன் இளஞ்சிவப்பு பந்தில் டெஸ்ட்...மிட்செல் ஸ்டார்க் ஆர்வம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா வரும் இந்திய கிரிக்கெட் அணியுடன் பகல்/இரவு டெஸ்ட் போட்டியில் இளஞ்சிவப்பு பந்துகளைக் கொண்டு விளையாட ஆர்வமாக இருப்பதாக வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தெரிவித்துள்ளார். கொரோனா  காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மார்ச் மாதத்திலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இந்திய, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியங்கள் இரு அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் குறித்து பேசி வருகின்றன. ஏற்கனவே இந்த ஆண்டு இறுதியில் 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாட திட்டமிட்டுள்ளன. ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை டி20 தொடருக்கு பிறகு இந்திய அணி அங்கு இந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதாக உள்ளது.

இந்நிலையில் ஆஸி. அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர் ஸ்டார்க் இணையதளம் ஒன்றில் வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் அனைத்து தரப்பாலும் வரவேற்கப்படும் சிறப்பான விஷயமாகும். ரசிகர்கள் அதை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இந்த தொடர் எப்போதும் விளையாட்டில் ஒரு வித்தியாசமான அம்சத்தை உருவாக்குகிறது. இந்த இரண்டு அணிகளுக்கிடையிலான போட்டியில் பந்துக்கும் மட்டைக்கும் இடையில் எப்போதும் ஒரு நெருக்கம் ஏற்படுகிறது. இந்தியா இதுவரை ஒரே ஒரு பகல்/இரவு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடி உள்ளது. அந்த போட்டியும் இந்தியாவில் தான் நடந்திருக்கிறது.

அவர்கள் வெளிநாட்டில் இளஞ்சிவப்பு பந்து உபயோகித்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது இல்லை. எனவே ஆஸ்திரேலியா வரும் இந்திய அணியுடன் ஏதாவது ஒரு டெஸ்ட் போட்டியில் இளஞ்சிவப்பு பந்துகளை பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். அதற்கு இந்தியாவும் தயாராக இருப்பதாக கேள்விப்பட்டேன்.
அந்த பகல்/இரவு டெஸ்ட் போட்டிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். இவ்வாறு ஸ்டார்க் கூறினார். இந்தியா கடந்த 2019-19ம் ஆண்டு முதல் முறையாக பகல்/இரவு டெஸ்ட் போட்டியில் வங்கதேசத்திற்கு எதிராக விளையாடியது. அதேபோல் வெளிநாட்டிலும் இளஞ்சிவப்பு பந்தை பயன்படுத்தி இந்தியா  விளையாடுமா என்ற கேள்விகள் எழுந்தன இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரு பகல்/இரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடும் என்பதை உறுதிப்படுத்தினார்.

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 4 போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடரை  2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.  இந்திய அணி வீரர் செதேஷ்வர் புஜாரா அடிலெய்டு, மெல்போர்ன், சிட்னி ஆகிய இடங்களில் நடைபெற்ற டெஸ்ட்களில் மூன்று சதங்கள் அடித்து அசத்தியதுடன், தொடரை வெல்லவும் காரணமாக இருந்தார். அதன் மூலம் இந்தியா ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேறியது.  இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கி ஓராண்டு தடை விதிக்கப்பட்டதால், இந்தியாவுடனான அந்த டெஸ்ட் தொடரில் டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் விளையாடவில்லை. இந்த ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டால்… வார்னர், ஸ்மித்  ஆகியோரின் அதிரடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.