தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் குறைப்பு:இசிஆர் மீனவர்கள் ஜூன் 1 முதல் மீன் பிடிக்கலாம்: அரசு அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் குறைக்கப்பட்டுள்ளதால், கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்கள் ஜூன் 1ம் தேதி முதலும், மேற்கு கடற்கரை பகுதி மீனவர்கள் ஆகஸ்ட் 1ம் தேதி முதலும் மீன்பிடிக்க செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கொரோனா ஊரடங்கால் கடந்த 68 நாட்களாக பாரம்பரிய மீனவர்கள் மற்றும் விசை படகுகளில் பணிபுரியும் மீன்பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். மேலும் இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இந்தியாவின் கிழக்கு கடற்கரையில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14ம் தேதி வரையான 61 நாட்களுக்கும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1 முதல் ஜூலை 31ம் தேதி வரையிலான 61 நாட்களுக்கும் விசை படகுகள் தனியுரிமை பொருளாதார மண்டலத்தில் மீன்பிடிக்க தடைவிதித்து ஆணையிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கின் காரணமாக விசை படகுகள் தொழிலில் ஈடுபடாத காலத்தினை கணக்கிட்டு, மீன்பிடி தடை காலத்தினை மாற்றி அறிவிக்குமாறு மீன்வளத்துறை அமைச்சர், தமிழக தலைமை செயலாளர் மற்றும் மீன்வளத் துறை செயலாளர் ஆகியோரால் இந்திய அரசின் மீன்வளத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, இந்திய அரசின் மீன்வளத்துறை தனது உத்தரவில் இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15 முதல் மே 31ம் தேதி வரையான 47 நாட்களுக்கும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 15 முதல் ஜூலை 31ம் தேதி வரையான 47 நாட்களுக்கும் தனியுரிமை பொருளாதார மண்டலத்தில் மீன்பிடி தடைகாலம் அமல்படுத்தப்படும் என்ற திருத்திய ஆணையை வெளியிட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம். மேற்கு கடற்கரை பகுதியில் விசை படகுகளுக்கு 61 நாளில் இருந்து 47 நாட்களாக மீன்பிடி தடைகாலம் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக அப்பகுதி மீனவர்கள் ஆகஸ்டு 1ம் தேதி முதல் மீன்பிடிக்க செல்லலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.