http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__948497951030732.jpg

பக்தர்கள், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு எதிரொலி: ஏழுமலையான் கோயில் சொத்துக்கள் விற்க தடை: ஆந்திர அரசு அதிரடி உத்தரவு

திருமலை: திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஆந்திரா மற்றும் தமிழகத்தில் விழுப்புரம், திருவள்ளூர், குடியாத்தம் உட்பட பல இடங்களில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகள், காலிமனைகள் உள்ளிட்ட சொத்துக்களை விற்க தேவஸ்தான அறங்காவலர் குழு முடிவு செய்துள்ளது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  மேலும் எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம், பாஜ, ஜனசேனா உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பக்தர்கள் சேவா சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. தேவஸ்தான சொத்துக்கள் விற்பனை விவகாரத்தில் ஜெகன் அரசு தலையிடுவதாகவும், இன்னும் சில ஆண்டுகளில் திருப்பதி மலையடிவாரம் முதல் திருமலை முழுவதும் பிளாட் போட்டு ஜெகன் அரசு விற்றுவிடும் எனவும் விமர்சித்திருந்தனர்.

இதற்கு திருப்பதி தேவஸ்தானம் அளித்திருந்த விளக்கத்தில், பயனற்ற சொத்துக்கள் ஆக்கிரமிப்பின் பிடிக்கு சென்றுவிடும் நிலை உள்ளதால், ₹23.92 கோடி சொத்துக்களை விற்க முடிவு செய்துள்ளோம். இதற்கும் ஜெகன் அரசுக்கும் சம்பந்தம் இல்லை என தெரிவித்திருந்தது. இந்நிலையில், திருப்பதி கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை விற்கக்கூடாது என ஆந்திர அரசு நேற்று முன்தினம் இரவு தேவஸ்தானத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணையில், ‘திருப்பதிக்கு பக்தர்கள் வழங்கிய 50 நிலங்களை விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும்.இதுதொடர்பாக இந்து மத தலைவர்கள், பக்தர்கள் மற்றும் ஆன்மிகவாதிகளின் ஆலோசனைபெற வேண்டும். விற்பனை செய்வதாக கூறப்படும் நிலத்தில் தேவஸ்தானம் சார்பில் கோயில் கட்டுவது, இந்து மத பிரசாரத்திற்கு பயன்படுத்துதல் உள்ளிட்ட இதர ஆன்மிக நிகழ்ச்சிகள்  நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து பரிசீலிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளது.

இதற்கிடையே, திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும்   அறநிலையத்துறையின் சார்பில் உள்ள கோயில்களின் நிலங்களை பாதுகாக்க வேண்டும்  என வலியுறுத்தி பாஜ சார்பில் நேற்று ஆந்திரா முழுவதும்  உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. குண்டூரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜ மாநில தலைவர் கண்ணா லட்சுமி நாராயணா, ‘‘அரசுக்கு ஏழுமலையான் நிலங்கள் விற்பனை செய்வதை நிறுத்தும் எண்ணமில்லை. மக்களை திருப்திபடுத்தவே அரசாணை வெளியிட்டுள்ளனர்’’ என்று குற்றம்சாட்டினார்.