மத்திய அரசின் இலவச மின்சார பறிப்பை கண்டித்து காங்கிரசார் கருப்பு துணி கட்டி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்
சென்னை: மத்திய அரசின் இலவச மின்சார பறிப்பு நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று காங்கிரசார் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் காங்கிரசார் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி நேற்று சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், அஞ்சலகங்கள், வங்கிகள், மின்சார அலுவலகங்கள் முன்பு காங்கிரசார் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னையில், 5க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
l சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவ ராஜசேகரன், மாநில பொதுச் செயலாளர் பொன்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் மாவட்ட தலைவர்கள் ரங்கபாஷ்யம், சிவராமன் மற்றும் நாஞ்சில் பிரசாத், எம்.பி.ரஞ்சன் குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ஈவிகேஎஸ்.இளங்கோன் நிருபர்களிடம் கூறியதாவது: விவசாயிகள் மீது அக்கறை கொண்ட ஒரே கட்சி காங்கிரஸ் தான். மத்திய பாஜ அரசு தமிழகத்தை அடிமையாக நடத்தி வருகின்றது.
இதை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் எடுத்த நடவடிக்கைகள் தற்போது தமிழகத்தில் இல்லை. 20 லட்சம் கோடி ஒதுக்கி அறிவிப்பதோடு கொரோனாவால் பாதித்த மக்களுக்கு என்ன செய்யலாம் என்று முதலில் சிந்திக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
* வடசென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் தண்டையார்பேட்டை தபால் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் செயல் தலைவர் எச்.வசந்தகுமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் எம்.எஸ்.திரவியம் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ உ.பலராமன், நிர்வாகிகள் சிரஞ்சீவி, வக்கீல் செல்வம், டி.வி.துரைராஜ், வீராரெட்டி உட்பட பலர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்.
* சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, முன்னாள் காங்கிரஸ் தலைவரும் எம்பியுமான திருநாவுக்கரசர் தலைமை வகித்தார். முன்னாள் எம்பி பீட்டர் அல்போன்ஸ், சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வீரபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
* சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் முத்தழகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.நகர் இல.பாஸ்கர் முன்னிலை வகித்தார். அதேபோன்று சென்னை உயர் நீதிமன்றம் அருகே காங்கிரஸ் சட்டப்பிரிவு இணை செயலாளர் எஸ்.கே.நவாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மகிளா காங்கிரஸ் துணை தலைவி சுதா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.