பயிரை நாசம் செய்யும் வெட்டுக்கிளிகள் மகாராஷ்டிராவுக்கு படையெடுப்பு: விளை நிலங்களில் ரசாயனம் தெளிக்க நடவடிக்கை
மும்பை: மகாராஷ்டிராவில் பயிர்களை நாசம் செய்யக் கூடிய பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன. இதனால் விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் நாசமடையும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. உலகத்திலேயே பாலைவன வெட்டுக்கிளிகள்தான் மிகவும் அபாயகரமான பூச்சியினம் ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு அறிவித்துள்ளது. இந்த பூச்சிகள் குறுகிய காலத்தில் ஏக்கர் கணக்கில் பயிர்களை நாசம் செய்துவிடும். இந்த பூச்சிகளால் வேளாண் உற்பத்தி பாதிக்கப்பட்டு உணவு பஞ்சம் ஏற்படும். எல்லாவித பச்சை இலைகளையும் உணவாக உட்கொள்ளும் இந்த வெட்டுக்கிளிகளால் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படும் எnன்று ஐ.நா. சபை எச்சரித்துள்ளது.
ஏற்கனவே இந்த வெட்டுக்கிளிகள் கென்யா, சோமாலியா, எத்தியோப்பியா, தெற்கு ஈரான் போன்ற நாடுகளில் விளை பயிர்களை பதம்பார்த்து விட்டு இப்போது பாகிஸ்தான் மற்றும் இந்தியாவை நோக்கி படையெடுத்துள்ளன. நேற்று முன்தினம் மத்திய பிரதேச மாநிலத்திற்குள் ஊடுருவிய இந்த அபாயகரமான வெட்டுக்கிளிகள் நேற்று மகாராஷ்டிராவில் நுழைந்துள்ளன. காற்றடிக்கும் திசையை நோக்கி கூட்டம் கூட்டமாக படையெடுக்கும் வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானில் இருந்து ராஜஸ்தானுக்கும் அங்கிருந்து குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்துக்குள் நுழைந்து பயிர்களை நாசப்படுத்தின. நேற்று மகாராஷ்டிராவில் உள்ள அமராவதி மாவட்டத்துக்குள் நுழைந்த வெட்டுக்கிளிகள், அங்கிருந்து வார்தாவுக்கும் பின்னர் நாக்பூரில் உள்ள கட்டோல் தாலுகாவுக்குள் நுழைந்துள்ளன.
சில நாட்களுக்கு முன்பு விதர்பா பிராந்தியத்தில் உள்ள சுமார் 5 கிராமங்களில் வெட்டுக்கிளிகள் ஊடுருவி பயிர்களை சேதப்படுத்தியதாக அதிகாரிகள் கூறினர்.
வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக அதிகாரிகள் பயிர்கள் மேல் ரசாயனத்தை தெளித்து வருகிறார்கள். தற்போது அமராவதி மாவட்டத்தில் உள்ள ஜலகேடா பைபாசில் வெட்டுக்கிளிகள் காணப்படுவதால் அங்கு ரசாயனம் தெளிக்கும் பணி நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே ஆள் இல்லாமல் ரிமோட் கண்ட்ரோலில் பறக்கும் ட்ரோன் மூலம் விளை நிலங்களில் ரசாயனத்தை தெளிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே கொரோனா வைரசால் மகாராஷ்டிரா மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.