http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__823497951030732.jpg

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி தென் தமிழகத்தில் கனமழை பெய்யும்

சென்னை:  தமிழகத்தில் தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக கரூர், வேலூர், திருத்தணி, திருச்சி ஆகிய நான்கு இடங்களில் வெயில் 108 டிகிரியாக இருந்தது. இதையடுத்து, ஈரோடு, சேலம் 106 டிகிரி, மதுரை விமான நிலையம் 104 டிகிரி, தர்மபுரி, பாளையங்கோட்டை, திருப்பத்தூர் 102 டிகிரி வெயில் நிலவியது. சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது.  இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் மழை பெய்துள்ளது.  
 இதையடுத்து, வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன்கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும்.  இது தவிர, மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.  

 மேலும், வட மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். அதேபோல தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத்தீவு, தென் மேற்கு அரபிக் கடல், வடக்கு அரபிக் கடல் பகுதிகளில் சூறாவளி மற்றும் பலத்த காற்று மணிக்கு 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும். எனவே  இன்று முதல் 30ம் தேதி வரை மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். இந்நிலையில், தென் கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதனால் 31ம் தேதி முதல் ஜூன் 4ம் தேதி வரை மீனவர்கள் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகின்றனர்.