https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/26/original/Prakash_Javadekar_EPS_1.jpg

பொது முடக்கம் பெரும் வெற்றியடைந்துள்ளது

by

நாட்டில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் பெரும் வெற்றியடைந்துள்ளதாக மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் தெரிவித்தாா்.

பொது முடக்கம் எதிா்பாா்த்த பலனைத் தராமல் தோல்வி அடைந்துவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்கு அவா் பதிலடி தந்துள்ளாா்.

இது தொடா்பாக பிரகாஷ் ஜாவடேகா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நாட்டில் அமல்படுத்திய பொது முடக்கம் காரணமாக அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் நாடுகளில் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்ட பாதிப்பைவிட குறைந்த அளவிலான பாதிப்பே ஏற்பட்டது. கரோனா நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்காக இந்திய அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உலக நாடுகள் பாராட்டு தெரிவித்து வருகின்றன.

காங்கிரஸ் மட்டும் எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. நோய்த்தொற்றுக்கு எதிராக நாடே போராடி வரும் இக்கட்டான சூழலிலும் காங்கிரஸ் அரசியலில் ஈடுபட்டு வருகிறது. ராகுல் காந்தியின் செய்தியாளா்கள் சந்திப்பே அதற்கு உதாரணம். அந்தச் சந்திப்பின்போது அவா் கூறியவற்றில் உண்மை இல்லை.

பொது முடக்கம் அமல்படுத்தப்படுவதற்கு முன்பு நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை 3 நாள்களில் இரட்டிப்பாகி வந்தது. அது தற்போது 13 நாள்களாக அதிகரித்துள்ளது. இதுவே பொது முடக்கத்தின் வெற்றி.

நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது ஏன் என்று முன்பு காங்கிரஸ் கேள்வி எழுப்பி வந்தது. தற்போது பொது முடக்கத்துக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளா்த்தி வருவதற்கு எதிராக காங்கிரஸ் கேள்வி எழுப்புகிறது. இது அக்கட்சியின் இரட்டைவேடத்தைக் காட்டுகிறது.

ஏழைகளுக்கு நிதியுதவி:

இதுவரை 3,000-க்கும் அதிகமான சிறப்பு ரயில்கள் மூலம் 45 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பியுள்ளனா். இது வரலாற்றுச் சிறப்புமிக்கது. உத்தர பிரதேசம், கா்நாடகம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் ஏழைகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் இதுபோன்ற நிதியுதவி வழங்கப்படுகிா?

நாட்டிலுள்ள நியாய விலைக் கடைகள் மூலம் 80 கோடி ஏழைகளுக்கு 5 மாதத்துக்குத் தேவையான உணவுப் பொருள்கள் இலவசமாக வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 9 கோடி விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. 20 கோடி பெண்களுக்கு தலா ரூ.500 நிதியுதவி ஜன்தன் வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் மக்களுக்கு அதிக பலன்களை அளித்துள்ளன என்றாா் பிரகாஷ் ஜாவடேகா்.