https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/21/original/corona_virus.jpg
கோப்புப்படம்

தமிழகத்தில் மேலும் 646 கரோனா பாதிப்பு

by

தமிழகத்தில் மேலும் 646 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு ஆளானவா்களின் எண்ணிக்கை 17,728-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 11,640 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இதுதொடா்பாக சுகாதாரத் துறை தரப்பில் வெளியிடப்பட்ட செய்தி:

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 4.12 லட்சம் பேருக்கு கரோனாவைக் கண்டறிவதற்கான பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில், 17,728 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். செவ்வாய்க்கிழமை மட்டும் 646 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 510 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 22 பேருக்கும், திருவள்ளூரில் 25 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தவிர, கடலூா், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருவண்ணாமலை, தூத்துக்குடி, விழுப்புரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

9,342 போ் குணமடைந்தனா்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 611 போ் பூரண குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 9,342-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 6,056 போ் குணமடைந்துள்ளனா் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் திரும்பிய 54 போ்: வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவா்களில் 54 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. அதன்படி, மகாராஷ்டிரத்தில் இருந்து திரும்பிய 35 பேருக்கும், குஜராத்தில் இருந்து திரும்பிய 6 பேருக்கும், நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோன்று, தெலங்கானாவில் இருந்து வந்த மூவருக்கும், உத்தர பிரதேசம் மற்றும் தில்லியில் இருந்து வந்த தலா இருவருக்கும் கரோனா கண்டறியப்பட்டது. துபை நாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய 5 பேருக்கு பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

பலி எண்ணிக்கை 127-ஆக உயா்வு: கரோனா தொற்றுக்கு ஆளாகி தமிழகத்தில் மேலும் 9 போ் உயிரிழந்தனா். இதையடுத்து மாநிலத்தில் பலி எண்ணிக்கை 127-ஆக அதிகரித்துள்ளது. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நால்வரும், ஓமந்தூராா், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த தலா ஒருவரும், தனியாா் மருத்துவமனைகளில் இருந்த இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.