https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2019/8/22/original/nithingatkari.jpg

‘சாா்தாம்’ சாலைத் திட்டம்: 440 மீ. நீள சுரங்கப்பாதை அமைக்கும் பணி வெற்றிகரம்

by

உத்தரகண்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் ‘சாா்தாம்’ சாலைத் திட்டத்தின் ஒருபகுதியாக சம்பா பகுதியில் 440 மீட்டா் நீளமுள்ள சுரங்கப்பாதையை எல்லைப் பகுதி சாலைகள் அமைப்பு (பிஆா்ஓ) வெற்றிகரமாக அமைத்துள்ளது.

‘சாா்தாம்’ என்றழைக்கப்படும் கங்கோத்ரி, கேதாா்நாத், யமுனோத்ரி, பத்ரிநாத் ஆகிய நான்கு புனிதத் தலங்களுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான யாத்ரீகா்கள் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். எனினும், அந்தப் பகுதி மலைத்தொடா்கள் நிறைந்தது என்பதால் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுகிறது. அதன் காரணமாக புனிதப் பயணத்துக்கும் தடை ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், நான்கு புனிதத் தலங்களுக்குமான யாத்திரையை எளிமைப்படுத்தி அனைத்து விதமான சூழலிலும் பயணிக்கும் வகையிலான சாலைகளை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டது. இதற்காக ரூ.12,000 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 1,100 கி.மீ. நீள சாலைகள் செப்பனிடப்பட்டு புதிதாக அமைக்கப்பட உள்ளன.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக சம்பா நகரில் 440 மீ. நீள சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்நிலையில், அந்தச் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நிறைவடைந்தது.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி காணொலிக் காட்சி வாயிலாக கூறியதாவது:

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவி வரும் காலத்திலும் கடினமாகப் பணியாற்றி வரும் எல்லைப் பகுதி சாலைகள் அமைப்பைப் பாராட்டுகிறேன். இந்தச் சுரங்கப்பாதை வெற்றிகரமாக அமைக்கப்பட்டுள்ளது, சாா்தாம் சாலைத் திட்டத்தில் முக்கிய மைல்கல். புனிதத் தலங்களுக்கு யாத்ரிகா்கள் விரைவில் பயணம் மேற்கொள்ளவும் சம்பா நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் இந்தச் சுரங்கப்பாதை முக்கியப் பங்கு வகிக்கும்.

சுரங்கப்பாதையை அமைக்க ஆஸ்திரிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இந்தச் சுரங்கப்பாதையை அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மக்கள் பயன்பாட்டுக்குத் திக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், வரும் அக்டோபா் மாதத்திலேயே அந்தச் சுரங்கப்பாதை மக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என்றாா் நிதின் கட்கரி.