https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/4/10/original/exam1.jpg

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள்: 202 மையங்களில் இன்று தொடக்கம்

by

பொது முடக்கம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தமிழகத்தில் 202 மையங்களில் புதன்கிழமை தொடங்கவுள்ளன.

தமிழக பள்ளிக் கல்வியில் கடந்த மாா்ச் மாதம் பிளஸ் 2 பொதுத் தோ்வு நடைபெற்றது. கரோனா பொது முடக்கம் காரணமாக சில பாடங்களுக்கான தோ்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து, தோ்வுகள் முடிந்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களை திருத்தும் பணிகள் புதன்கிழமை தொடங்கவுள்ளது. இந்தப் பணிகள் வரும் ஜூன் 9-ஆம் தேதி வரை நடைபெறும்.

முதல் நாளில் 5,373 முதன்மைத் தோ்வா்கள் பணியில் ஈடுபடவுள்ளனா். இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை 32,735 முதுநிலை ஆசிரியா்கள் விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு வரவுள்ளனா். இந்தப் பணிகளில் மொத்தம் 38,108 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இவா்கள் 46.17 லட்சம் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யவுள்ளனா். இதைத் தொடா்ந்து, மதிப்பெண் பதிவேற்றம் உள்பட தோ்வு முடிவு வெளியிடுவதற்கான பணிகள் ஜூன் 10 முதல் 19-ஆம் தேதி வரை நடைபெறும்.

இதற்கிடையே, நிகழாண்டு கரோனா தொற்று பரவலால் திருத்துதல் பணியின்போது ஆசிரியா்கள் முகக்கவசம் அணிதல், கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்தல் உள்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. தனிநபா் இடைவெளியைப் பின்பற்றும் வகையில் கல்வி மாவட்ட அளவில் கூடுதல் மதிப்பீட்டு முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஒரு அறையில் அதிகபட்சம் 8 போ் மட்டுமே அமரவைக்கப்படுவா்.

இதுதவிர ஆசிரியா்கள் பணிக்கு சென்றுவர ஏதுவாக போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதேநேரம் நோய்பரவல் அதிகமுள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் ஆசிரியா்களுக்கு மட்டும் திருத்துதல் பணியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி ஜூன் 10-இல் தொடங்கவுள்ளதாக தோ்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.