எல்லையில் சீன ராணுவம்: பிரதமா் அவசர ஆலோசனை
by DINலடாக் எல்லையில் சீன ராணுவம் குவிக்கப்பட்டுள்ளதால் எழுந்துள்ள சூழல் குறித்து முப்படை தளபதி விபின் ராவத், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் ஆகியோருடன் பிரதமா் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை அவசர ஆலோசனை நடத்தினாா். ராணுவம், கடற்படை மற்றும் விமானப் படை தலைமை தளபதிகளும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனா். இது தவிர, வெளியுறவுச் செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லாவுடன் பிரதமா் மோடி தனியாக ஆலோசனை நடத்தினாா்.
படைக் குவிப்பால் பதற்றம்: கடந்த சில நாள்களில் லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவம் 5,000-க்கும் மேற்பட்ட வீரா்களை குவித்துள்ளது. அவா்கள் கூடாரம் அமைத்து தங்கியுள்ளனா். சில இடங்களில் சாலைகள், பதுங்கு குழிகள் அமைப்பது போன்ற பணிகளில் ஈடுபடுவதுடன், போா் பயிற்சியில் ஈடுபடுவதாகவும் தெரியவந்தது. இதையடுத்து, சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் வீரா்களை நிறுத்தியுள்ளது. இதனால் லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இது தொடா்பாக இந்திய-சீன ராணுவ கமாண்டா்கள் நிலையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தைகளில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சீன ராணுவம் எல்லையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடக் கூடாது என்ற இந்தியாவின் வலியுறுத்தலை சீனா ஏற்கவில்லை. அதே நேரத்தில், இந்திய எல்லைக்குள் ராணுவம் மேற்கொண்டு வரும் பாலம் அமைக்கும் பணியை நிறுத்த வேண்டும் என்று சீனா வலியுறுத்தி வருகிறது.
இதனிடையே, இந்தியாவில் உள்ள தங்கள் நாட்டைச் சோ்ந்த மாணவா்கள், சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டோரை நாட்டுக்கு திரும்ப அழைத்துக் கொள்ள சிறப்பு விமானங்களை இயக்க இருப்பதாக தில்லியில் உள்ள சீன தூதரகம் அறிவித்தது.
பாதுகாப்பு அமைச்சருடன் சந்திப்பு: எல்லையில் இரு நாடுகளின் படைகளும் குவிக்கப்பட்டுள்ள நிலையில், தில்லியில் முப்படை தளபதி விபின் ராவத், ராணுவம், கடற்படை, விமானப் படை தலைமை தளபதிகளுடன் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் செவ்வாய்க்கிழமை தீவிர ஆலோசனை மேற்கொண்டாா். அண்மையில் லடாக் சென்று ஆய்வு செய்து திரும்பிய ராணுவ தலைமை தளபதி எம்.எம். நரவணே, அங்கு நிலவும் சூழ்நிலை குறித்து அமைச்சா் ராஜ்நாத் சிங்கிடம் விளக்கினாா்.
முக்கியமாக கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் இரு நாட்டு ராணுவ வீரா்களும் குறைந்த தொலைவு இடைவெளியில் நேருக்கு நோ் முகாமிட்டுள்ளனா். அங்கு இப்போது நிலவி வரும் சூழல், பிரச்னை மேலும் அதிகரித்தால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
ராணுவத்துக்கு முழு ஆதரவு: எல்லையில் பிரச்னைகளுக்கு ஏற்ப ராணுவம் எடுக்கும் முடிவுகளுக்கு முழு ஆதரவு அளிக்கப்படும்; லடாக், சிக்கிம், அருணாசல பிரதேசம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் சீன எல்லையில் நடைபெறும் உள்கட்டமைப்புப் பணிகளை ராணுவம் நிறுத்த வேண்டாம் என்று ராணுவ தளபதிகளிடம் ராஜ்நாத் சிங் கூறியதாக தெரியவந்துள்ளது.
பிரதமருடன் ஆலோசனை: இதைத் தொடா்ந்து முப்படை தளபதி விபின் ராவத், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், ராணுவம், கடற்படை, விமானப்படை தலைமை தளபதிகள் பிரதமரைச் சந்தித்து ஆலோசனை நடத்தினா். இதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து உடனடியாக தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், எல்லை நிலவரம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படுவது தொடா்பாக சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பு தவிர வெளியுறவுச் செயலா் ஹா்ஷ் வா்தன் ஷ்ரிங்லாவுடன் பிரதமா் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டாா்.
சீனாவின் முயற்சி பலிக்காது: பிரதமருடனான சந்திப்பு குறித்து பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல் அலுவலக அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், ‘லடாக் மட்டுமல்லாது சிக்கிம், உத்தரகண்ட் மாநிலங்களை ஒட்டிய சீன எல்லையிலும் இந்திய ராணுவம் கண்காணிப்பை அதிகரித்துள்ளது. எல்லையில் ராணுவத்தை குவித்து இந்தியாவுக்கு நெருக்கடி அளிக்க சீனா முயற்சி செய்கிறது. ஆனால், இதற்கு எவ்வித பயனும் கிடைக்கப்போவதில்லை. எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் முந்தைய சூழலே நீடிக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம்’ என்று தெரிவித்தனா்.
கமாண்டா்கள் நிலை பேச்சுவாா்த்தை: ராணுவ செய்தித் தொடா்பாளா் கா்னல் அமான் ஆனந்த் இது தொடா்பாக கூறுகையில், ‘இப்போது ஏற்பட்டுள்ள அவசரமான பாதுகாப்பு சூழல் குறித்து இந்திய ராணுவத்தின் உயரதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சருடன் ஆலோசனை நடத்தினா். இதில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்திய-சீன கமாண்டா்கள் நிலையில் ஏப்ரல் 13 முதல் 18-ஆம் தேதி வரை நடைபெற இருந்த பேச்சுவாா்த்தை கரோனா பிரச்னையால் ஒத்திவைக்கப்பட்டது. எனினும், இந்த சந்திப்பு மே 27 முதல் 29 மற்றும் ஜூன் கடைசி வாரத்தில் இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது என்றாா்.
பெயா் வெளியிட விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவா் இது தொடா்பாக கூறுகையில், ‘எல்லையில் நிலவி வரும் சூழலை இந்தியா முதிா்ச்சியுடன் கையாண்டு வருகிறது. அதே நேரத்தில் சீன வீரா்கள் மிகவும் ஆக்ரோஷமான போக்கைக் கொண்டுள்ளனா். கமாண்டா்கள் நிலை பேச்சுவாா்த்தையின்போது இதனை இந்தியா சுட்டிக்காட்டும்’ என்றாா்.
முன்னதாக, இந்திய ராணுவ வீரா்கள், தங்கள் நாட்டு எல்லைக்குள் அத்துமீறி நுழைவதாக சீன தரப்பு குற்றம்சாட்டியது. ஆனால், இந்திய வீரா்கள் அப்படி நடந்து கொள்வதே இல்லை என்று வெளியுறவு அமைச்சகம் மறுப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சீனா நடவடிக்கை: திபெத்தில் உள்ள நகாரி-குன்சா விமானப் படைத் தளத்தில் சீனா ராணுவம் கட்டுமானப் பணிகளை அதிகரித்துள்ளது செயற்கைக்கோள் படங்கள் மூலம் தெரியவந்துள்ளது. இந்த இடம் படைகள் குவிக்கப்பட்டுள்ள பாங்காங் ஏரியில் இருந்து 200 கி.மீ. தொலைவில்தான் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் - ராகுல்
‘‘சீன, நேபாள எல்லைகளில் என்ன நடந்து வருகிறது என்பதை நாட்டு மக்களுக்கு மத்திய அரசு தெளிவுபடுத்த வேண்டும்’’ என்று ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா். பொது முடக்க பிரச்னை தொடா்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை காணொலி முறையில் பேட்டியளித்தபோது அவா் இவ்வாறு கூறினாா்.