https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/17/original/2924c-26-lockdown-50623341.jpg
கோப்புப்படம்

மகாராஷ்டிரம்: மும்ப்ரா பகுதியில் முழு பொது முடக்கம் அமல்

by

மகாராஷ்டிர மாநிலம், தாணே மாநகராட்சிக்கு உள்பட்ட மும்ப்ரா பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பொது இடங்களில் தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்காமல் அதிக அளவில் மக்கள் கூடியதையடுத்து, இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து தாணே மாநகராட்சி ஆணையா் விஜய் சிங்கால் வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல், எச்சரிக்கைகளையும் மீறி, மும்ப்ரா பகுதியில் தனிநபா் இடைவெளியை கடைப்பிடிக்காமல் பொது இடங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூட்டம் இருந்தது. எனவே மும்ப்ராவில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்படுகிறது. பால் விற்பனையகங்கள், மருந்தகங்கள் மட்டும் காலை 7 மணி முதல் மாலை 9 மணி வரை திறக்கப்படும். பல்பொருள் அங்காடிகள், காய், கனி கடைகள் உள்பட இன்னபிற கடைகள் அடுத்த உத்தரவு வரும் வரை மூடியே இருக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே தாணே மாவட்டத்தில் கரோனா தொற்று அதிதீவிரமாக பரவியுள்ள சில பகுதிகளில் பொது முடக்க நெறிமுறைகளை மக்கள் மீறி வருவதால், அப்பகுதிகளில் அதிரடிப் படையினா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். பொது முடக்கம் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு, அவா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதேபோல் லோக்மான்ய சாவா்க்கா் நகா், வாக்ளே எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிரடி போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். இதையடுத்து, அதிரடிப் படை வீரா்கள் மும்ப்ரா பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் கொடி அணிவகுப்பு நடத்தினா்.

மகாராஷ்டிரத்தின் தாணே மாவட்டத்தில் மட்டும் இதுவரை 6,044 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்; 183 போ் உயிரிழந்தனா்.