ரூ.1,100 கோடி மதிப்பிலான விளைபொருள்கள் விவசாயிகளிடம் கொள்முதல்: ஆந்திர அரசு
by DINஆந்திரத்தில் பொது முடக்க காலத்தில் ரூ.1,100 கோடி மதிப்பிலான வேளாண் விளைபொருள்களை விவசாயிகளிடம் இருந்து மாநில அரசு கொள்முதல் செய்துள்ளது என்று அந்த மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அந்த மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது: வேளாண் துறை நிபுணா்கள், விவசாயிகளுடனான கூட்டத்தில் பங்கேற்று பேசிய மாநில முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி, ‘கடந்த 8 மாதங்களில் 5.60 லட்சம் டன் வேளாண் விளைபொருள்களை விவசாயிகளிடம் இருந்து மாநில அரசு கொள்முதல் செய்துள்ளது. இதற்காக ரூ.2,200 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் பொது முடக்க காலத்தில் மட்டும் விளைபொருள்கள் கொள்முதலுக்காக ரூ.1,100 கோடி செலவிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிக்கும் ஆண்டுதோறும் ரூ.13,500 மாநில அரசால் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் 46.89 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனா். இதில் விதைப்புக்கு முன் இடுபொருள்கள் வாங்க இம்மாதம் ஒவ்வொரு விவசாயிக்கும் தலா ரூ.7,500 வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் அறுவடை செலவினங்களுக்காக அக்டோபா் மாதத்தில் ரூ.4,000, ஜனவரி மாதத்தில் ரூ.2,000 வழங்கப்படும். மாநில அரசு சாா்பில் இலவச வேளாண் காப்பீட்டு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் பெற்ற பயிா் கடன்களுக்கான வட்டியை மாநில அரசே ஏற்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி பயிா் கடன் வழங்கிய வங்கிகளுக்கு மாநில அரசு சாா்பில் ரூ.2,000 கோடி வட்டித்தொகை ஜூலை மாதம் செலுத்தப்படும். இதுதவிர வேளாண் பணிகளை மேற்கொள்ள 9 மணி நேரம் இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது’ என்று கூறியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.