https://img.dailythanthi.com/Articles/2020/May/202005271034101848_The-token-for-ration-products-will-be-issued-from-June-29_SECVPF.gif

ஜூன் மாத ரேசன் பொருட்களுக்கான டோக்கன் மே 29ந்தேதி முதல் வழங்கப்படும்; முதல் அமைச்சர் அறிவிப்பு

ஜூன் மாத ரேசன் பொருட்களுக்கான டோக்கன் வருகிற 29ந்தேதி முதல் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை,கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க தமிழக அரசு தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது.  நாடு முழுவதும் தமிழகம் உள்பட வரும் 31ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.இந்த நிலையில், கொரோனா வைரஸ் உதவித்தொகையாக அரிசி வாங்குகிற அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தகுதியான அளவு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சீனி ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் கடந்த ஏப்ரலில் அறிவிக்கப்பட்டது.  இதன்படி, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அரசு அறிவிப்பின்படி மக்களுக்கு அவை வழங்கப்பட்டன.

இதேபோன்று ஜூன் மாதத்திற்கான ரேசன் பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் மே 29ந்தேதி முதல் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.  தொடர்ந்து 29, 30, 31 ஆகிய 3 நாட்களுக்கு வீடுகளுக்கு நேரில் சென்று டோக்கன் வழங்கப்படும்.  அதில், பொருள் வழங்கப்படும் நேரம் மற்றும் நாள் ஆகியவை குறிப்பிடப்பட்டு இருக்கும்.இந்த டோக்கனை வைத்து கொண்டு ஜூன் 1ந்தேதி முதல் ரேசன் கடைகளில் விலையில்லா பொருட்களை வாங்கி கொள்ளலாம்.ரேஷன் பொருட்கள் எந்த பகுதிக்கு, எப்போது வழங்கப்படும் என்ற விவரம் அடங்கிய டோக்கன் வழங்கப்படும்.  அந்த டோக்கனில் அட்டைதாரர் விவரம், நிவாரணம் வழங்கப்படும் தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதில் உள்ள தேதி, நேரத்தின் போது தான் பொதுமக்கள் ரேஷன் கடைக்கு சென்று நிவாரண பொருட்களை பெற்று கொள்ள வேண்டும்.டோக்கன் வாங்க யாரும் கடைக்கு வர வேண்டாம். வீட்டில் வந்து வழங்கப்படும்.  பொருட்கள் வாங்க வரும் போது ஸ்மார்ட் கார்டு, டோக்கன் ஆகியவற்றை வாகன சோதனையின் போது காட்ட வேண்டும். குடும்பத்தில் ஒருவர் மட்டுமே வந்து பெற்று செல்ல வேண்டும். அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அரசு தெரிவித்து உள்ளது.