புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்த வழக்கு: உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி
புலம் பெயர்ந்த தொழிலாளர்களை தமிழகம் கையாளும் நிலை வெட்கமாக இருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மதுரை,
ராமநாதபுரத்தை சேர்ந்த மலைக்கண்ணு என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை, காணொலி மூலம் விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி அமர்வு, கேரள மாநிலத்தை விட்டு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் செல்ல மறுக்கும் நிலையில் தமிழகம் அவர்களை கையாளும் நிலை வெட்கமாக இருப்பதாக அதிருப்தி தெரிவித்தனர்.
தமிழகத்தில் உள்ள பதிவு செய்யப்படாத, புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து ஜூன் 10ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை பணிக்காக பயன்படுத்தி விட்டு இப்போது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல என நீதிபதிகள் தெரிவித்தனர்.