https://img.dailythanthi.com/Articles/2020/May/202005270757362996_US-VP-Pences-press-secretary-returns-to-work-after-testing_SECVPF.gif

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அமெரிக்க துணை அதிபரின் பத்திரிகை செயலாளர்

அமெரிக்க துணை அதிபர் மைக் பென்சின் பத்திரிகை செயலாளர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு பணிக்கு திரும்பியுள்ளார்.

வாஷிங்டன்,அமெரிக்காவில் தீவிர அச்சுறுத்தலாக இருந்து வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை 17.13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.  1 லட்சத்திற்கும் கூடுதலானோர் பலியாகி உள்ளனர்.சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து 4 லட்சத்து 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு திரும்பியுள்ளனர்.  அந்நாட்டின் துணை அதிபராக இருந்து வருபவர் மைக் பென்ஸ்.  இவரது பெண் செய்தி தொடர்பாளராக இருந்து வருபவர் கேத்தி மில்லர்.

அதிபர் டொனால்டு டிரம்பின் தலைமை உதவியாளரான ஸ்டீபன் மில்லரின் மனைவியான கேத்திக்கு, கடந்த 8ந்தேதி நடந்த கொரோனாவுக்கான பரிசோதனையில் தொற்று ஏற்பட்டது உறுதியானது.  அதற்கு முந்தின நாள், டிரம்ப் நடத்திய இறைவணக்க நிகழ்ச்சியில் கேத்தி கலந்து கொண்டார்.இதில் டிரம்ப் மற்றும் பென்ஸ் ஆகியோரது மனைவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  அடுத்த நாள் மில்லருக்கு பாதிப்பு உறுதியானது அதிர்ச்சி ஏற்படுத்தியது.  இதனை தொடர்ந்து, மில்லர் 2 வாரங்கள் வரை தனிமைப்படுத்தி கொண்டார்.  அவர் நேற்று மீண்டும் பணிக்கு திரும்பினார்.இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், 3 முறை கொரோனா வைரஸ் பரிசோதனையில் பாதிப்பு இல்லை என உறுதியானது.  அதனால் இன்று பணிக்கு திரும்பியுள்ளேன் என தெரிவித்து உள்ளார்.கேத்தி மில்லருக்கு பாதிப்பு உறுதியானவுடன், பணியாளர்கள் முக கவசங்களை அணிய வேண்டும் என வெள்ளை மாளிகை புதிய கொள்கைகளை அமலுக்கு கொண்டு வந்தது.  எனினும், கொரோனா பரிசோதனைகளை செய்து விட்டோம் என கூறி, அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் பென்ஸ் ஆகியோர் முக கவசங்களை அணிய மறுத்து விட்டனர்.